உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிரிட்டனில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.
பிரிட்டனின் முதன்மை சுகாதார அதிகாரி கிறிஸ் விட்டி, வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கொரோனா தொற்று அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார். லண்டனின் ராயல் பெர்க்ஷையர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த நோயாளி வயதானவர் என்றும், ஏற்கெனவே பல்வேறு உடல் உபாதைகளால் அவர் அவதிப்பட்டு வந்தார் என்றும் கிறிஸ் விட்டி தெரிவித்துள்ளார்.
இதேபோல் அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. 129 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும், சுகாதாரத் துறை தீவிரமாக மேற்கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.