உலகம்

இறந்த பெண்ணின் உடலில் இருந்து பெறப்பட்ட கருப்பை மூலம் குழந்தை பிரசவிக்க முடியும்..!

webteam

இறந்த பெண்ணின் உடலில் இருந்து தானமாக பெறப்பட்ட கருப்பை மூலம் மற்றொரு பெண், குழந்தை பெற்றுள்ளது மருத்துவ துறையில் புதியதொரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

மாறிவரும் உணவு முறை உள்ளிட்ட காரணங்களால் இப்போது சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதில் சிரமம் நிலவுகிறது. அதேசமயம் வளர்ந்துவரும் மருத்துவ முறை அவர்களுக்கு துணை புரிகிறது. இதனால் குழந்தை பெற்றவர்கள் பலர் உண்டு. பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போவதற்கு அவர்களின் கருப்பை கோளாறுகள் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. கருப்பை குழந்தையை தாங்கும் திறனோடு இல்லாமல் இருப்பது, தொற்று ஏற்பட்டிருப்பது உள்ளிட்ட காரணங்களால் குழந்தை சிலருக்கு தங்காமல் சென்றுவிடுகிறது. இவர்களுக்கு புதிய மருத்துவத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.

அதன்படி நல்ல ஆரோக்கியமான கருப்பை கொண்ட உயிருடன் இருக்கும் பெண்ணிடம் இருந்து பெறப்பட்ட கருப்பை, குழந்தை பாக்கியம் இல்லாமல் சிரமப்பட்ட மற்றொரு பெண்ணுக்கு பொருத்தப்பட்டது. கடந்த 2014-ஆம் ஆண்டு சுவீடனில் முதன்முதலாக இந்த சோதனை செய்யப்பட்டது. இதன்மூலம் அப்பெண் குழந்தை பெற்றார்.

இந்நிலையில் இறந்த பெண்ணின் உடலில் இருக்கும் கருப்பை கொண்டு மற்றொரு பெண்ணுக்கு குழந்தை பெற வைக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். அதன்படி 42 வயதில் பக்கவாதத்தில் இறந்த பெண்ணின் கருப்பையை எடுத்து 32 வயதில் உள்ள பெண்ணுக்கு மருத்துவர்கள் பொருத்தினர். இப்பெண் பிறக்கும்போதே கருப்பை இல்லாமல் பிறந்தவர். அதன்படி கருப்பை பொருத்தப்பட்ட சுமார் 5 மாத காலம் வரையிலும் அப்பெண்ணுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை. இதனையடுத்து செயற்கை கருத்தரிப்பு மூலம் அப்பெண் கர்ப்பம் அடைந்தார். சுமார் 10 காலத்திற்கு பின் அப்பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. பிரேசிலில் தான் இந்த மருத்துவ பரிசோதனை நடைபெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு இக்குழந்தை பிறந்த நிலையில் தற்போது ஆராக்கியமுடன் அக்குழந்தை தனது அம்மாவுடன் வசித்து வருகிறார்.

இறந்த பெண்ணின் உடலில் இருந்து தானமாக பெறப்பட்ட கருப்பை மூலம் குழந்தை பெறமுடியும் என்பது குழந்தை இல்லாத தம்பதியினருக்கு சற்று வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. அதேபோல மருத்துவ உலகிலும் இது புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

Courtesy: The Times of India