இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம் நடைபெற்றது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள் பல்வேறு போராட்டங்களை அரசுக்கு எதிராக நடத்தி வருகின்றனர். கோட்டாபய அரசு பதவி விலக வலியுறுத்தி, இளைஞர்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் தீப்பந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்கரையில் தீப்பந்தங்களுடன் கூடிய இளைஞர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேரணியாகச் சென்றனர். இந்த போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்பி சுமந்திரன் உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டனர். கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு ஆதரவாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய உணவுப்பொருட்கள், எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலை மிகக்கடுமையாக உயர்ந்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. மேலும் அரசு இலங்கை முழுவதும் தினமும் 13 மணி நேர மின்வெட்டும் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் நோயாளிகள் தவித்து வருகின்றனர், மருந்து பொருட்களுக்கும் இலங்கையில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக இலங்கை மக்கள் நாடு முழுவதும் ராஜபக்ச சகோதரர்கள் பதவி விலகக்கோரி தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.