மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூர். இங்குள்ள டேடக் கெராமத் என்கிற இடத்தில், தருல் குர்ஆன் இட்டிஃபா கியா என்கிற மதப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 23 மாணவர்கள் உள்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை கோலாலம்பூர் தீயணைப்பு மீட்புத்துறை இயக்குனர் கிருடின் டிராம்மன் உறுதிபடுத்தியுள்ளார். தீ கொளுந்துவிட்டு எரியும்போது ஏற்பட்ட அதிகப்படியான புகையால்தான் இவர்கள் பரிதாபமாக உயிரிழந்ததாக
டிராம்மன் தெரிவித்துள்ளார்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட தீ விபத்துகளில் மிக மோசமான தீ விபத்தாக இது பார்க்கப்படுகிறது. விபத்து மிகுந்த மனவேதனை அளிப்பதாகவும், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.