ஜோடி வான்ஸ் இன்ஸ்டா
உலகம்

அமெரிக்கா | விழாவில் பங்கேற்ற 20 வயது பெண் பாடி பில்டர்.. மாரடைப்பால் மரணம்!

அமெரிக்காவில் விழா ஒன்றில் பங்கேற்ற 20 வயது பெண் பாடி பில்டர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Prakash J

நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நபர்கள், சமீபகாலமாக எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகின்றன. இந்தியா மட்டுமல்லாது, உலக நாடுகளிலும் இது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவில் 20 வயதான பாடிபில்டர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜோடி வான்ஸ். 20 வயதான இவர், பாடிபில்டராக இருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்றா NPC டெக்சாஸ் போட்டியின் பெண்கள் பாடி பில்டர் பிரிவில் ஜோடி வான்ஸ் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் அவர் தனது உடலமைப்பு, ஊக்கமளிக்கும் எண்ணங்கள் மற்றும் மேற்கோள்களின் படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டார். சமூக ஊடக தளத்தில் அவருக்கு 8,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருந்தனர்.

இந்த நிலையில், ஓஹியோவில் நடைபெற்ற அர்னால்ட் விளையாட்டு விழாவில் அவர் கலந்துகொண்டார். இந்த விழாவில் அவர் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை. அங்கு, தன்னுடைய மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உதவுவதற்காக அங்குச் சென்றிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் இறந்துவிட்டதாகவும் கூறியதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவரது மரணத்தை அவருடைய குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அவருடைய குடும்பத்தினர், “அவரது மரணம் எதிர்பாராதது. கடுமையான நீரிழப்பு காரணமாக அவரது இதயம் நின்றுவிட்டது. மருத்துவமனையின் அனைத்து முயற்சிகளையும் மீறி, அவர்களால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் எப்போதும் ஓர் அழகான நபர். ஒவ்வொரு நாளும் அவரை நாங்கள் மிஸ் செய்கிறோம். அவரிடமிருந்து நீங்கள் ஏதாவது கற்றுக் கொள்ள விரும்பினால், உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்” என இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

இதற்கிடையே வான்ஸின் பயிற்சியாளர் ஜஸ்டின் மிஹாலி, இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், வான்ஸ், தனக்குத் தெரியாமல் உடலை மேம்படுத்தக்கூடிய ஆபத்தான இரண்டு பொருட்களை உட்கொண்டதாகவும், அதுவே அவரது நீரிழப்புக்கு வழிவகுத்ததாகவும் தெரிவித்துள்ளார். ”அதை எடுத்துக் கொள்ளக்கூடாது எனக் கூறியும் அவர் தனக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டார்” என அவர் தெரிவித்துள்ளார்.