செய்தியாளர் - ராஜ்குமார்.ர
அமெரிக்காவில் எடுக்கப்படும் இந்த முடிவு, அந்நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள பங்குச்சந்தைகள், நாணய மதிப்புகள், தங்கம் உள்ளிட்ட முதலீட்டுச் சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அப்படி அமெரிக்க Fed வட்டியை உயர்த்தியதற்கான காரணம் என்ன? இதனால் உலகப் பொருளாதாரத்தில் என்ன மாற்றம் ஏற்படும்? தங்கம் விலை இனி என்ன ஆகும் என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு..
அமெரிக்க Federal Reserve, செப்டம்பர் 16-ஆம் தேதி தனது benchmark interest rate-ஐ 0.25 சதவீத புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் federal funds target range 3.75 முதல் 4 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பிறகு அமெரிக்க Fed வட்டி விகிதத்தை உயர்த்துவது இதுவே முதல் முறையாகும்.
Fed-ன் இந்த முடிவுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக அமெரிக்காவில் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்த நிலையில் இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அமெரிக்கப் பொருளாதார செயல்பாடுகள் வலுவான வேகத்தில் இருப்பதாகவும், உள்நாட்டுச் செலவுகள் நிலையாக இருப்பதாகவும், உற்பத்தித்திறன் வளர்ச்சி மற்றும் முதலீடுகள் வலுவாக இருப்பதாகவும் Federal Reserve தெரிவித்துள்ளது. பொதுவாக, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தில் விலை நிலைத்தன்மையை ஏற்படுத்தவும் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை மாற்றுவது வழக்கம். வட்டி விகிதம் உயரும்போது கடன் பெறுவதற்கான செலவு அதிகரிக்கலாம். இதனால் மக்கள் மற்றும் நிறுவனங்களின் கடன் சார்ந்த செலவுகள் குறையக்கூடும். அதன்மூலம் பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தையும் பணவீக்க அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டி உயர்வு பயன்படுத்தப்படுகிறது.
அமெரிக்காவின் வட்டி விகித உயர்வு உலக நாடுகளுக்கும் முக்கியமானதாக இருப்பதற்கு மற்றொரு காரணம் அமெரிக்க டாலர். அமெரிக்க வட்டி விகிதங்கள் உயரும்போது, டாலர் சார்ந்த முதலீடுகளின் கவர்ச்சி அதிகரிக்கக்கூடும். இதனால் உலகளவில் முதலீட்டு பணத்தின் நகர்விலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. Fed-ன் சமீபத்திய வட்டி உயர்வுக்குப் பிறகு அமெரிக்க டாலர் வலுப்பெற்றதாக கூறப்படுகிறது. இதன் தாக்கம் தங்கத்தின் மீதும் காணப்படலாம். பொதுவாக, வட்டி விகிதம் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையை பாதிக்கும் முக்கியக் காரணிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றன. வட்டி விகிதம் உயரும்போது, வட்டி வருமானம் தரும் முதலீடுகளின் ஆர்வம் அதிகரிக்கக்கூடும். இதனால் வட்டி வருமானம் வழங்காத தங்கத்தின் மீதான முதலீடு குறைய வாய்ப்புள்ளது. Fed-ன் சமீபத்திய வட்டி உயர்வுக்குப் பிறகு சர்வதேச சந்தையில் spot gold விலை 1 சதவீதத்துக்கும் மேல் சரிந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், தங்கத்தின் விலை தொடர்ந்து எப்படி நகரும் என்பதை வட்டி விகிதம் மட்டுமின்றி டாலர் மதிப்பு, பணவீக்கம், புவிசார் அரசியல் சூழல் மற்றும் முதலீட்டாளர்களின் தேவை உள்ளிட்ட பல காரணிகள் தீர்மானிக்கும்.
அமெரிக்க வட்டி விகித மாற்றம் இந்தியாவையும் மறைமுகமாக பாதிக்கக்கூடும். குறிப்பாக, டாலர் மதிப்பு, ரூபாயின் மதிப்பு, வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து மற்றும் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்களின் மனநிலை ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், அமெரிக்க Fed-ன் இந்த முடிவை உலக நாடுகளின் மத்திய வங்கிகளும் முதலீட்டாளர்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதற்கிடையே, மத்திய வங்கியின் இந்த முடிவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான வட்டி விகிதம் 1 சதவீதம் அல்லது அதற்கும் கீழே இருக்க வேண்டும் என்றும், Federal Reserve வட்டி விகிதத்தை விரைவாகக் குறைக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவுக்கு வர்த்தக பற்றாக்குறையை ஏற்படுத்தும் நாடுகளுடனான வர்த்தகத்தை நிறுத்தினால், ஆண்டுக்கு குறைந்தது 1.5 டிரில்லியன் டாலர் வரை சேமிக்க முடியும் என்றும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார். அமெரிக்கா நீண்டகாலமாக உலக நாடுகளைச் சுமந்து கொண்டிருப்பதாகக் கூறியுள்ள ட்ரம்ப், இந்த நிலை தொடரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். ஒருபுறம் அமெரிக்க Fed பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ள நிலையில், மறுபுறம் அதிபர் ட்ரம்ப் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.