King Fahd Causeway closed x page
உலகம்

எந்நேரத்திலும் ஈரான் தாக்கலாம்.. உச்சகட்ட பயத்தில் சவூதி அரேபியா.. மூடப்பட்டதா சர்வதேச பாலம்?

ஈரானின் தாக்குதலுக்கு அஞ்சி உலகின் முக்கியமான சர்வதேச போக்குவரத்து பாலத்தை சவூதி அரேபிய அரசு மூடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Praveen Joshva L

இஸ்ரேல், அமெரிக்கப் படைகளுக்கும் ஈரானுக்கும் நடக்கும் மோதல் 1 மாதத்தை கடந்துள்ள நிலையில், நாளுக்குநாள் உக்கிரம் அடைந்து வருகிறது. போரின் முதல் நாளிலேயே தங்களது உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியின் இழப்பால் கடும் ஆத்திரம் அடைந்த ஈரானின் ராணுவம், அமெரிக்க நிலைகள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் போர் தீவிரம் அடைந்துள்ளது. ஈரான் ராணுவம் சவுதி அரேபியா, ஓமன், கத்தார், குவைத், பக்ரைன், ஈராக், சைப்ரஸ் ஆகிய நாடுகளைத் தாக்கிவரும் நிலையில், இந்த தாக்குதலுக்கு அந்நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, ஈரானுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

Karaj B1 Bridge

இதனிடையே அமரிக்கா கடந்த ஏப்ரல் 2 அன்று ஈரானின் மிக முக்கியமான மற்றும் பெரிய பாலங்களில் ஒன்றான கராஜ் பி1 (Karaj B1 Bridge) பாலத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அந்த பாலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஈரான் பழிவாங்கும் என அஞ்சப்பட்ட நிலையில், சவூதி மற்றும் பக்ரைன் ஆகிய நாடுகளை இணைக்கும் கிங் ஃபஹத் பாலத்தை (King Fahd Causeway) ஈரான் தாக்கும் என அச்சம் எழுந்தது.

இதனிடையே ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சவூதி அரேபியாவின் எரிசக்தி கட்டமைப்புகளைத் தாக்கியது. இதனைத் தொடர்ந்து உளவு தகவல்களின் அடிப்படையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக கிங் ஃபஹத் பாலம், இன்று அதிகாலை சில மணிநேரம் மூடப்பட்டது.

King Fahd Causeway

ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் இந்தப் பாலத்துக்கான ஆபத்து நீங்கிய நிலையில், மீண்டும் பாலம் பொதுப்போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பக்ரைன் தீவை அரேபிய தீபகற்பத்துடன் இணைக்கும் ஒரே நிலவழிப் பாதை இந்தப் பாலம் என்பதால் இந்தப் பாலத்தின் பாதுகாப்பு சர்வதேச அளவில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பாலத்தை ஈரானின் தாக்குதலுக்கு பயந்து மூடியது சவூதி அரேபியாவின் அச்சத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.