அலெஜான்ட்ரோ ரோசலேஸ் காஸ்டிலோ x
உலகம்

FBI | டாப் 10 மிகவும் தேடப்பட்டு வந்த குற்றவாளி.. மெக்சிகோவில் கைது!

அமெரிக்காவின் எஃப்பிஐ அமைப்பால் 'மிகவும் தேடப்படும் 10 குற்றவாளிகள்' பட்டியலில் இருந்த அலெஜான்ட்ரோ ரோசலேஸ் காஸ்டிலோ கைது செய்யப்பட்டுள்ளார்.

PT WEB

அமெரிக்காவின் எஃப்பிஐ அமைப்பால் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் தேடப்பட்டு வந்த 'மிகவும் தேடப்படும் 10 குற்றவாளிகள்' பட்டியலில் இருந்த அலெஜான்ட்ரோ ரோசலேஸ் காஸ்டிலோ மெக்சிகோவில் நேற்றைய முன்தினம் (ஜனவரி 16) கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள வட கரோலினாவின் சார்லோட் நகரில் கடந்த 2016 ஆம் ஆண்டு, தன்னுடன் பணிபுரிந்த 23 வயதுடைய சாண்ட லீ லே என்ற பெண்ணிடம் கடன் வாங்கிய பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று, அந்தப் பெண்ணைச் சுட்டுக்கொன்றுவிட்டு காஸ்டிலோ என்ற நபர் மெக்சிகோவிற்குத் தப்பிச் சென்றார்.

அலெஜான்ட்ரோ ரோசலேஸ் காஸ்டிலோ

இந்தக் கொலை வழக்கில், கடந்த 10 ஆண்டுகளாக காஸ்டிலோ தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில், எஃப்பிஐ-ன் சார்லோட் பிரிவு, மெக்சிகோ அரசு, அமெரிக்க வெளியுறவுத் துறை மற்றும் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) அன்று, மெக்சிகோவில் காஸ்டிலோ பிடிபட்டிருக்கிறார். இதன்மூலம், எஃப்.பி.ஐ யின் 10 ஆண்டுகால முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது.

தொடர்ந்து, கைது செய்யப்பட்டுள்ள காஸ்டிலோ, மெக்சிகோ காவலில் உள்ளதாகவும், அவர் விரைவில் வட கரோலினாவிற்கு நாடு கடத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என கூறப்பட்டிருக்கிறது. மேலும், இந்த வழக்கில், "பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்குத் தகுந்த நீதி வழங்கப்படும்" என அமெரிக்க நீதித் துறை தெரிவித்துள்ளது.

அலெஜான்ட்ரோ ரோசலேஸ் காஸ்டிலோவின் கைது குறித்து மெக்சிகன் பாதுகாப்பு செயலாளர் ஓமர் கார்சியா ஹார்ஃபுச் கூறுகையில், காஸ்டிலோ மீது ’சர்வதேச கைது வாரண்ட்’ (Red Notice) மற்றும் நாடுகடத்தலுக்கான கைது வாரண்ட் இருப்பதாகவும், அவர் மீது முதல் நிலை கொலை, ஆயுதமேந்திய கொள்ளை, வாகன திருட்டு மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Federal Bureau of Investigation

முன்னதாக, 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை, எஃப்பிஐ-ன் 'டாப் 10' பட்டியலில் உள்ள 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது, கடந்த நான்கு ஆண்டுகளில் பிடிபட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாகும். தற்போதைய, அமெரிக்க நிர்வாகத்தின்கீழ் காவல்துறையினருக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் சுதந்திரமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.