அமெரிக்காவில் எரியும் கட்டிடத்திலிருந்து தந்தை ஒருவர் தன் 3 வயது மகனைக் காப்பாற்ற 2வது மாடியில் இருந்து தூக்கி வீசி, தீயணைப்பு வீரரால் குழந்தை பிடிக்கப்படும் காட்சி வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 2வது மற்றும் 3வது தளங்களில் கடந்த மார்ச் 7ஆம் தேதி காலை தீ விபத்து ஏற்பட்டது. கொளுந்து விட்டு தீ எரியத் துவங்கிய அந்த கட்டிடத்தில் 3வது மகனுடன் தந்தை ஒருவரும் சிக்கியிருந்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தபோதும் தீயை கட்டுப்படுத்த இயலவில்லை. இதனால் ஜன்னல் வழியே தனது குழந்தையை தூக்கி எறிந்துவிட்டு, தானும் குதிக்க வேண்டிய கட்டாயம் தந்தைக்கு ஏற்பட்டது.
குழந்தையை தூக்கி வீசுமாறு தீயணைப்பு வீரர்கள் கூச்சலிட்டனர். தந்தை முதலில் தயங்கினார். ஆனால் தீ உக்கிரமடைந்து கட்டிடம் முழுவதும் சூழ்ந்ததால், மகனைத் தூக்கி எறிவதைத் தவிர அவருக்கும் வேறு வழியில்லை. இறுதியாக தனது மகனை 2வது மாடியின் ஜன்னலிலிருந்து தூக்கி எறிந்தார். தீயணைப்பு வீரர்கள் மிகவும் சாமர்த்தியமாக குழந்தையைப் பிடித்தனர். சில வினாடிகளுக்குப் பிறகு, தந்தையும் குதித்தார். அவரையும் தீயணைப்பு வீரர்கள் கீழே விழாமல் பிடித்தனர். தந்தையும் மகனும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
குழந்தை தூக்கி வீசப்பட்டு, தீயணைப்பு வீரர் பிடிக்கும் முழு சம்பவம் மற்றொரு வீரரின் கேமராவில் பதிவானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.