உக்ரைன் போரில் உயிரிழந்த கர்நாடகாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் நவீனின் உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக வழங்கப்படும் என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
கடந்த ஒன்றாம் தேதி, கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்தார். போர் சூழலால் நவீனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், அவரது உடல் எமிரேட்ஸ் விமானம் மூலம் வரும் திங்களன்று அதிகாலை பெங்களூருவுக்கு கொண்டுவரப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் நவீனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று சடங்குகள் நடத்திவிட்டு, தாவண்கெரே எஸ்.எஸ். மருத்துவ ஆராய்ச்சி கல்வி நிறுவனத்திற்கு வழங்குவோம் என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர்,''என் மகன் உடல் பெங்களூருவுக்கு 21ம் தேதி அதிகாலை 3 மணிக்கு வந்து சேரும். எங்கள் கிராமத்திற்கு 9 மணிக்கு வந்தடையும். பின்னர் இறுதி சடங்குகள் நடைபெறும். தொடர்ந்து, பொதுமக்களின் பார்வைக்கு என் மகனின் உடல் வைக்கப்பட்டு, பின்னர், எஸ்.எஸ். மருத்துவமனைக்கு மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக உடல் ஒப்படைக்கப்படும்.
ஹாவேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு செய்தி கிடைத்தது, எமிரேட்ஸ் விமான சேவையிலிருந்தும் செய்தி கிடைத்தது. குறைந்த பட்சம் இப்போது எங்கள் மகனின் உடல் கொண்டுவரப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். முதலமைச்சர் எங்களிடம் பேசி நன்றியை தெரிவித்தார். பெங்களூரு விமான நிலையத்திற்கும், எங்கள் கிராமத்திற்கும் வருவதாக கூறினார்'' என்று தெரிவித்துள்ளார்.