இங்கிலாந்தில் ஹாலிவுட் பட பாணியில் சாவி இல்லாமல், கண்ணாடியை உடைக்காமல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பென்ஸ் காரை 60 வினாடிகளில் திருடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தின் மேற்கு மிட்லேண்ட் காவல்துறையினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ காட்சி சிசிடிவி கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. வீடியோவில், ஒரு வீட்டின் வாசலில் விலை உயர்ந்த பென்ஸ் கார் ஒன்று நிற்கிறது. திடீரென காரில் அங்கு வந்த இருவர், சமிக்ஞைகளை (Signals) கண்டறியும் ரிலே பாக்ஸி-ன் (Relay box) உதவி கொண்டு, கார் உரிமையாளரின் வீட்டிற்குள் இருந்த கார் சாவியை இயக்கி கதவை திறந்து, பின்னர் காரை திருடிச் சென்றனர்.
காரை திருடும் போது அவர்கள் கார் கண்ணாடியை உடைக்கவில்லை. எந்த சிரமமும் இன்றி தொழில்நுட்பத்தின் உதவியுடன் 60 வினாடிக்கும் குறைவான நேரத்தில் காரை திருடிச் சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, ரிலே பாக்ஸ் மூலம் சமிக்ஞைகளை எளிதாக பெற முடியும், ஆனால் ரிலே பாக்ஸின் சமிக்ஞைகள் இரும்பை ஊடுருவிச் செல்ல முடியாது. ஆகையால கார் சாவிகளை இரும்புப் பெட்டிக்குள் பூட்டி வைப்பது நல்லது என்றார்கள்.