செலினா கோம்ஸ் இன்ஸ்டா
உலகம்

அமெரிக்கா | அகதிகள் வெளியேற்றம்.. கண்ணீர் விட்டு அழுத பிரபல பாப் பாடகி!

அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவதற்கு பிரபல பாப் பாடகி செலினா கோம்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Prakash J

அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறார். பல்வேறு திட்டங்களை ரத்து செய்தும், புதிய பணிகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். அதில், அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையும் ஒன்று. அதாவது, அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்கும் வகையில் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், சட்டவிரோதமாக அங்கு குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கான ராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மெக்சிகோ, கொலம்பியா, பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களும் கடத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவதற்கு பிரபல பாப் பாடகி செலினா கோம்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

selena gomez

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், ”குழந்தைகள் உட்பட என் மக்கள் அனைவரும் தாக்கப்படுகிறார்கள். எனக்கு எதுவும் புரியவில்லை. இதற்கு நான் ஏதாவது செய்ய விரும்புகிறேன். ஆனால் என்னால் முடியவில்லை. எல்லா வழிகளிலும் நான் முயற்சி செய்வேன் என்று வாக்கு கொடுக்கிறேன்” எனப் பதிவிட்டிருந்தார். ஆனால், கடும் எதிர்ப்புகள் எழுந்ததால் இந்த வீடியோவை செலினா கோம்ஸ் நீக்கியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயதான பாப் பாடகியும், நடிகையுமான செலினா கோம்ஸ், 2019ஆம் ஆண்டு ’லிவிங் அன் டாக்குமெண்டட்’ என்ற பெயரில் வெளியான ஆவணப் படத்தை தயாரித்திருந்தார். ட்ரம்பின் முதலாவது ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவில் ஆவணங்களின்றி வாழ்ந்த 8 குடும்பங்களின் கதைகளை கூறுவதாக அந்த ஆவணப்படம் அமைந்திருந்தது. செலினா கோம்ஸின் தந்தை மெக்சிகோவை பூர்விகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.