எமிலி டமரி, மாண்டி டமரி எக்ஸ் தளம்
உலகம்

ஹமாஸ் விடுவித்த பணயக்கைதி.. இஸ்ரேல் திரும்பியதை கண்டு லண்டனில் இருந்த தாய் மகிழ்ச்சி!

ஹமாஸ் அமைப்பினரிடம் இருந்து எமிலி டமரி என்பவர் விடுவிக்கப்பட்டு, வீடு திரும்பி உள்ளார். இதையடுத்து எமிலி டமரியின் தாயார் மாண்டி டமரி நன்றி தெரிவித்துள்ளார்.

Prakash J

இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னை என்பது இன்று நேற்றல்ல.. பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இதில் காஸாவில் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே ஒப்பந்தம் ஏற்கப்பட்டது. அதன்படி, கடந்த ஜனவரி 19ஆம் தேதி முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து ஹமாஸ் படையினர் தங்கள் வசம் இருந்த 3 பணயக் கைதிகளை விடுவித்தனர். பதிலுக்கு இஸ்ரேலும் 90 பாலஸ்தீனர்களை விடுவித்தது. அடுத்தகட்டமாக ஹமாஸ் அமைப்பு வரும் ஜனவரி 25ஆம் தேதி, தங்கள் பிடியில் உள்ள 4 பணயக் கைதிகளை விடுவிக்க உள்ளது.

மாண்டி டமரி, எமிலி டமரி,

முன்னதாக, ரோமி கோனென், டோரன் ஸ்டெய்ன்ப்ரெச்சர், எமிலி டமரி ஆகிய பெண் பிணைக் கைதிகள் காஸா செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இஸ்ரேல் அழைத்து வரப்பட்டனர். இதைக் கண்ட இஸ்ரேல் மக்கள் அவர்களுக்கு ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிலையில், தன் மகள் நலமுடன் வீடு திரும்பியதையடுத்து எமிலி டமரியின் தாயார் மாண்டி டமரி பெரும் ஆனந்தம் அடைந்துள்ளார்.

இதுகுறித்து அவர், “471 நாட்களுக்குப் பிறகு எமிலி இறுதியாக வீடு திரும்பியுள்ளார். எமிலிக்காகப் போராடிய அனைவருக்கும் நன்றி. இஸ்ரேல், பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களின் போராட்டக் குணமே எமிலியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளது. காஸாவில் எமிலியின் கொடுங்கனவு ஒருழியாக முடிவுக்கு வந்துள்ளது. என் மகளைப் போன்று ஒவ்வொரு பணயக்கைதியும் விடுவிக்கப்பட வேண்டும். வீடு திரும்பக் காத்திருக்கும் பணயக்கைதிகளுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரத்தில், வீடு திரும்பிய எமிலி, தன் கையில் இரண்டு விரல்களை இழந்திருப்பதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 2023 அக்டோபர் 7 தாக்குதலின்போது ஹமாஸ் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் எமிலி இரண்டு விரல்களை இழந்துள்ளார் என அவரது குடும்பத்தினர் தற்போது தெரிவித்துள்ளனர். எமிலியின் கை கட்டுகளால் சுற்றப்பட்டிருப்பதையும், ஒரு சில விரல் நுனிகள் காணாமல் போயுள்ளதையும் அவர் குடும்ப உறுப்பினர்களுடன் காணொளி அழைப்பில் வந்தபோது காண முடிந்தது.

மாண்டி டமரி, எமிலி டமரி

எமிலி டமரி, தனது 20 வயதில் இஸ்ரேலுக்கு குடிபெயர்வதற்கு முன்பு தென்கிழக்கு லண்டனில் வசித்து வந்தார். ஹமாஸ் படைகளால் இஸ்ரேலில் தனது வீட்டிலிருந்து கடத்தப்பட்டதை அடுத்து தனது மகளின் விடுதலைக்காக லண்டனில் பிறந்த மாண்டி டமரி தீவிரமாகப் போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.