அமெரிக்காவில் கொரோனா ஒரு புறம் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறது. மறுபுறம் போராட்டங்கள் வெடித்துள்ளன.அமெரிக்காவின் வெள்ளைக் காவல் அதிகாரி ஒருவரின் முட்டிக்கும் தரைக்கும் நடுவே 8 நிமிடங்கள் 46 நொடிகள் சிக்கிப் பிரிந்தது ஜார்ஜ் பிளாய்டின் உயிர்.
''மூச்சு விட முடியவில்லை; கொலை செய்துவிடாதீர்கள்'' என்ற பிளாய்டின் அபயக்குரல் எழுப்பியும் அவரைக் காவலர்கள் கண்டுகொள்ளாமல் அவரின் உயிரைப் பறித்தனர். உலகிலேயே மிகவும் வசதியான நகரங்களின் ஒன்றான மினியாபொலிஸ் நகரில் இந்தச் சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தால் இன்று அமெரிக்கா பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது.
பிளாய்டின் மரணத்திற்கு நீதி வேண்டி நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கம் முதல் வெள்ளை மாளிகை வரை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டார். போராட்டம் என்ற பெயரில் கருப்பின மக்கள் கடைகளை சூறையாடினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் எனத் தெரிவித்து இருந்தார்.
இந்த பதிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தங்கள் நிறுவன வரைமுறைக்கு எதிரானது எனக்கூறி ட்விட்டர் நீக்கியது. ஆனால் ஃபேஸ்புக் நீக்கம் செய்யவில்லை. இதனால் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்கள் பலரும் தங்கள் நிறுவனத்தின் செயல்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். சிலர் அடையாள வேலைநிறுத்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ட்ரம்பின் கருத்து அரசின் அறிவிப்பு போலவே பார்க்கப்பட்டதாகவும் அதனால் அதனை நீக்கவில்லை எனவும் ஃபேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது.