அமெரிக்காவில் அகதிகளை ஏற்றுக் கொள்ளும் திட்டத்திற்கு ட்ரம்ப் தடை விதித்துள்ள நிலையில், அவர்களை வழக்கம்போல ஏற்றுக் கொள்ளுமாறு பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஆறு நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு அகதிகளாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் அகதிகளை ஏற்றுக்கொள்ளும் திட்டத்திற்கு தற்காலிகத் தடை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அகதிகளுடன் சேர்ந்து தீவிரவாதிகளும் ஊடுறுவி விடுவதாக ட்ரம்ப் அரசு கருதுகிறது. எனவே தீவிரவாத அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்காவைக் காப்பாற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ட்ரம்ப் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பென்டகனில் நாட்டின் புதிய பாதுகாப்புத்துறை அமைச்சர் பொறுப்பை ஜேம்ஸ் மேட்டின்ஸ் ஏற்றுக்கொள்ளும் நிகழ்வில் கலந்து கொண்ட டொனால்டு ட்ரம்ப் அகதிகளுக்குத் தடை விதிப்பதற்கான உத்தரவுகளில் கையெழுத்திட்டார். சிரியா அகதிகளுக்கு அனுமதியளிக்க முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
டொனால்டு ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது முதாதையர்கள் ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் போலந்து போன்ற நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் என்றும் தன்னுடைய மனைவியின் பெற்றோர்கள் சீனா, வியட்நாமில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோல் அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக வந்து குடியேறியவர்கள்தான் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு வரும் அனைத்து அகதிகளுக்கும் தடை விதிக்காமல் சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபடுவோருக்கு மட்டும் தடை விதிக்க வேண்டும் என்று ஜூக்கர்பெக்கர் கேட்டுக் கொண்டுள்ளார். பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் கணினி பொறியாளர்கள் பலர் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.