பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி, அங்கிருந்து அமெரிக்கா சென்றார். அங்கு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, இன்று அதிகாலை அதிபர் ட்ரம்பைச் சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பிறகு பேசிய ட்ரம்ப், இந்தியாவுக்கு எஃப் 35 ஸ்டெல்த் போர் விமானங்களை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் சிறப்பம்சங்கள் குறித்தும் இதை வாங்கவேண்டியதன் அவசியங்கள் குறித்தும் தற்போது பார்க்கலாம்
தற்போது உலகில் பயன்பாட்டில் உள்ள போர் விமானங்களிலேயே அதிநவீனமானதாகவும் வலிமை மிக்கதாகவும் F35 ரக விமானங்கள் பார்க்கப்படுகின்றன. பிரபலமான லாக்ஹீட் நிறுவனம் தயாரிக்கும் இவ்விமானங்கள் ஒலியை விட வேகமாக பறக்கக்கூடியவை என்பதும் ரேடார் போன்ற மின்னணு சாதனங்கள் கண்களில் இருந்து தப்பிக்கும் வல்லமை கொண்டைவை. மேலும் தொலைதூரத்திலிருந்து இலக்கை குறிவைத்து அழிக்கும் திறனும் இவ்விமானங்களுக்கு உண்டு. 3 ரகங்களில் இவ்விமானங்கள் விற்கப்படும் நிலையில் இவறறின் விலை 80 மில்லியன் டாலர் முதல் 110 மில்லியன் டாலர் வரை உள்ளது.
மேலும் இவ்விமானங்கள் ஒரு மணி நேரம் பறப்பதற்கு மட்டும் 36 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா, பிரிட்டன், இத்தாலி, நார்வே ஆகிய நாடுகளில் இந்த ரக விமானங்கள் உள்ளன. ஜப்பான், தென்கொரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கும் இவ்விமானங்கள் வழங்கப்பட உள்ளன. நேட்டோ அமைப்பில் இல்லாமல் பசிபிக் பிராந்தியத்தில் இல்லாமல் F35 விமானங்களை வைத்திருக்கப்போகும் முதல் நாடு என்ற பெயரும் இந்தியாவுக்கு கிடைக்க உள்ளது.
தற்போது இந்தியாவிடம் உள்ள ரஃபேல் விமானங்கள் முந்தைய தலைமுறையாக அறியப்படும் நிலையில் இனி வாங்க உள்ள F35 விமானங்கள் 5ஆவது தலைமுறையைச் சேர்ந்தவை ஆகும். இந்தியா விமானப்படையில் ஏற்கனவே உள்ள பல விமானங்கள் பழையதாகிவிட்ட நிலையில் ரஃபேல் விமானங்கள் வலிமையை கூட்டியுள்ளன. அடுத்து வர உள்ள F35 விமானங்கள் வலிமையை மேலும் பல படிகள் அதிகரிக்க உள்ளன. எனினும் இவற்றின் விலையும் பராமரிப்பு மற்றும் பயன்பாட்டு செலவுகளும் எதிர்மறையான விஷயங்களாக உள்ளன. பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளுடன் சுமுக உறவுகள் இல்லாத சூழலில் இத்தகைய விமானங்கள் அவசியம் என அரசு கருதுகிறது.