சீனா fb
உலகம்

ஒரு நாயை போல 😭 .. காண்போரை கண்கலங்க வைத்த உணவு டெலிவரி ஊழியரின் கதறி அழும் வீடியோ !

சீனாவில், டெலிவரி ஊழியர்களின் நிலையை விளக்கி ஒரு டெலிவரி பாய் கதறி அழுது வெளியிட்ட வீடியோ இணையத்தில் இப்போது வேகமாக பரவி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

சிறிய பிஸ்கெட் பாக்கெட்டில் தொடங்கி பெரிய வீடு வரை ஆசைப்பட்ட எதை வாங்க வேண்டும் என்றாலும் அதற்கு பணம் தேவை.ஆசைப்பட்டதை வாங்க வேண்டும் என்பதை தாண்டி இங்கு பலர் அன்றாட தேவைகளுக்கு தேவையானதை கூட வாங்க முடியாமல் அதற்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த ஓட்டத்தை அவர்களே நினைத்தாலும் நிறுத்த முடியாது என்பதுதான் கசக்கக்கூடிய உண்மை.

அப்படித்தான், தனது குடும்பத்திற்காகவும், அவர்களின் அன்றாட தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவும் கால்களில் சக்கரத்தை கட்டிக்கொண்டு வேலைப்பளுவோடு தன் வாழ்நாளை கழிக்கும் சீன உணவு டெலிவரி ஊழியரின் கண்ணீர் கதையை விளக்குகிறது இந்த தொகுப்பு.

சீனாவில், மஞ்சள் நிற டெலிவரி சீருடை மற்றும் ஹெல்மெட் அணிந்த அந்த நபர், உணவு டெலிவரி தொழிலில் எந்தளவுக்கு கடினமாக இருக்கிறது, அதனால் எவ்வளவு உடல் மற்றும் மன ரீதியான அழுத்ததை அவர் பெறுகிறார் என்பதை யதாத்தமாக விளக்குவதாக அந்த வீடியோ விளக்குகிறது.

ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்த பிறகு தனது வேலை தன்னை ஓவ்வொரு நாளும் சோர்வடைய வைப்பதாகவும் ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்தால் அதற்கும் வழியில்லை என்று கதறி அழுகிறார்.

"இப்போது நான் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் உணவு டெலிவரி செய்கிறேன். ஒரு நாயைப் போல சோர்வடைகிறேன், ஒரு நொடி கூட என்னால் ஓய்வெடுக்க முடியவில்லை. ஏனென்றால் நான் ஓய்வெடுத்தால் அன்றைய தினம் பசியுடன் தூங்க போக வேண்டி இருக்கும். இந்தச் சூழலில் நான் எப்படி கவலைப்படாமல் இருக்க முடியும்?" 

படிக்கும் காலத்தில் ஒழுங்காக படிக்காமல் பாதிலேயே படிப்பை நிறுத்தியதே இதற்கு காரணம் என சொல்லி அவர் வருந்துகிறார். அவர் மேலும், "எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால், நான் கண்டிப்பாக ஒழுங்காக படிப்பேன். ஆசிரியர்கள் எச்சரித்தும் நான் கேட்காமல் பள்ளியை விட்டு வெளியேறியது தவறு" என்று கூறி கதறி அழுகிறார்.

"என் பெற்றோருக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையைகூட என்னால் கொடுக்க முடியவில்லை. நான் விரும்பும் வாழ்க்கையை கூட என்னால் வாழ முடியாது. இது என் இதயத்தை உடைக்கிறது. ஆனால் இதைப் பற்றி நான் யாரிடம் பேச முடியும்?" என்று மனம் உடைந்து பேசியிருக்கிறார்.

இந்த வீடியோ காண்போரையும் கண்கலங்க வைத்துள்ளது.

இதுபோன்ற சம்பவம் சீனாவில் நடப்பது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு, சீனாவில் டெலிவரி ஊழியர் ஒருவர் 18 மணி நேரம் தொடர்ச்சியாக வேலை செய்த நிலையில், அவர் பைக்கில் தூங்கிய போது அப்படியே அவரது உயிர் பிரிந்தது. அவர் குடும்பத்திற்கு அவர் ஒருவர் மட்டுமே வருமானம் ஈட்டி வந்ததால் சில சமயங்களில் 3 மணி நேரம் மட்டுமே தூங்கியிருக்கிறார் என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெரியவந்தது.