கிரீன்லாந்து விவகாரத்தில் ட்ரம்ப் விதிக்க உள்ள வரிக்கு ஐரோப்பிய நாடுகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கிரீன்லாந்தின் பாதுகாப்பு குறித்து ட்ரம்ப் அஞ்சினால் அதற்கு நேட்டோ அமைப்பு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர வரி விதிப்புகள் மூலம் அல்ல என ஐரோப்பிய யூனியன் கொள்கை உருவாக்கப் பிரிவு தலைவர் காஜா கல்லாஸ் தெரிவித்துள்ளார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்கா அடுத்த பார்வை கிரீன்லாந்து மீது விழுந்துள்ளது. கிரீன்லாந்துக்கு சமீபகாலமாகவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உரிமை கொண்டாடி வருகிறார். அவர், “நான் எளிமையான முறையில் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறேன். ஆனால் அது முடியாவிட்டால் கடினமான வழியில் அதைச் செய்வோம். பேச்சுவார்த்தை மூலம் கிரீன்லாந்தை இணைக்க முடியாவிட்டால் அமெரிக்கா கடுமையான வழியில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்” என எச்சரித்துள்ளார். இது மீண்டும் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திவரும் நிலையில் டென்மார்க் இதற்குப் பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில், ’கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்ற முயன்றால் முதலில் சுட்டுத்தள்ளுங்கள்... பிறகு பேசுங்கள்’ என ராணுவ வீரர்களுக்கு டென்மார்க் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, கிரின்லாந்தைக் கைப்பற்ற நேட்டோ நாடுகள் உதவ வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தி இருந்தார். தொடர்ந்து, கிரீன்லாந்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட8 ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் 10% வரிவிதிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்திருந்தார். இந்த நிலையில், கிரீன்லாந்து விவகாரத்தில் ட்ரம்ப் விதிக்க உள்ள வரிக்கு ஐரோப்பிய நாடுகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
கிரீன்லாந்தின் பாதுகாப்பு குறித்து ட்ரம்ப் அஞ்சினால் அதற்கு நேட்டோ அமைப்பு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர வரி விதிப்புகள் மூலம் அல்ல என ஐரோப்பிய யூனியன் கொள்கை உருவாக்கப் பிரிவு தலைவர் காஜா கல்லாஸ் தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பின் முடிவால் ரஷ்யாவும் சீனாவும்தான் பலன் பெறும் என்றும் பாதிப்பு அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் மட்டுமே என்றும் காஜா கல்லாஸ் கூறியுள்ளார். பிரிட்டன் பிரதமர், பிரான்ஸ் அதிபர் உள்ளிட்டோரும் ட்ரம்ப் முடிவை விமர்சித்துள்ளனர்.