நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், போரைத் தீவிரப்படுத்துவதில் ரஷ்யா தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுடனான போரில் எதிர்த்து போராடுவதற்காக உக்ரைனுக்கு மேலும் உதவி புரியவிருப்பதாக பிரிட்டன் நாடுகள் தெரிவித்துள்ளன.
உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சர், ”உக்ரைனுக்கு ஏவுகணை அமைப்புகள் போன்ற போதுமான நவீன அமைப்புகள் தேவை. ரஷ்யாவின் ஏவுகணைகளுக்கு எதிராக போதுமான செயல்திறன் கொண்ட, குறைந்தபட்சம் 10 அமைப்புகள் உக்ரைனுக்கு தேவை” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், உக்ரைனுக்கு ரூ.5,000 கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை பிரிட்டன் தலைமையிலான உக்ரைனுக்கான சர்வதேச நிதியம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக, இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரிட்டன் பாதுகாப்புத் துறையின் செயலாளர் ஜான் ஹீலி தெரிவித்துள்ளார். உக்ரைனின் ராணுவத்தை பலப்படுத்துவதன் மூலம், ரஷ்யாவின் தாக்குதலை ஒடுக்க முடியும் எனவும் அவர் கூறினார். ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் வாங்கவும், டாங்கிகள், ராணுவ வாகனங்களைப் பழுது பார்க்கவும் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் வழங்கப்படும் ரூ.5,000 கோடியில் ரூ.3,500 கோடியை பிரிட்டன் வழங்கியுள்ளது. எஞ்சிய தொகையை உக்ரைனுக்கான சர்வதேச நிதியத்தின் மூலம் நார்வே கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.