பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் அடிமையாக்கும் (Addictive) வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அம்சங்களை உடனடியாக மாற்ற வேண்டும், இல்லையெனில் மிகப்பெரிய அபராதம் விதிக்கப்படும் என்று மெட்டா நிறுவனத்திற்கு ஐரோப்பிய யூனியன் (EU) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைகள் சட்டம் (Digital Services Act - DSA) கீழ் நடைபெற்று வரும் விசாரணையில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள் பயனர்களை நீண்ட நேரம் செயலியில் வைத்திருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய யூனியன் குற்றம்சாட்டியுள்ளது. குறிப்பாக Infinite Scroll, Autoplay மற்றும் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப தொடர்ந்து உள்ளடக்கங்களை பரிந்துரைக்கும் அல்காரிதம் போன்ற அம்சங்களே அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றிய தொழில்நுட்ப ஆணையர் ஹென்னா விர்க்குனென் கூறும்போது, "ஐரோப்பிய மக்களின் உடல் மற்றும் மனநலத்தை பாதுகாப்பது சமூக வலைதளங்களின் முதன்மை பொறுப்பாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் Autoplay மற்றும் Infinite Scroll போன்ற அம்சங்களை Default ஆக முடக்குவது, Screen Time Breaks வசதியை கட்டாயப்படுத்துவது மற்றும் பயனர்களை அதிக நேரம் ஈர்க்கும் வகையில் செயல்படும் Recommendation Algorithm-ஐ மாற்றுவது போன்ற வடிவமைப்பு மாற்றங்களை மெட்டா மேற்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் சரி செய்யப்பட்டால், மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய ஆண்டு வருவாயின் 6 சதவீதம் வரை அபராதம் விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதிகாரம் உள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை மெட்டா நிறுவனம் மறுத்துள்ளது. இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்றும், இளம் பயனர்களின் பாதுகாப்பிற்காக ஏற்கனவே பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, Teen Accounts என்ற புதிய வசதியின் மூலம் பெற்றோர் இரவு நேரங்களில் குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், தினசரி திரை நேரத்திற்கு (Screen Time) வரம்பு நிர்ணயிக்கவும் முடியும் என்று மெட்டா கூறியுள்ளது. முன்னதாக, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்துவதை தடுக்க மெட்டா தவறிவிட்டதாகவும், இதனால் அவர்கள் பொருத்தமற்ற உள்ளடக்கங்களை பார்க்கும் அபாயம் இருப்பதாகவும் ஐரோப்பிய யூனியன் குற்றம்சாட்டியிருந்தது. மேலும், ஒரே மாதிரியான உள்ளடக்கங்களை தொடர்ந்து காட்டி பயனர்களை தீவிரமான உள்ளடக்கங்களுக்குள் இழுக்கும் "Rabbit Hole" அல்காரிதம் குறித்தும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு டிக்டாக் நிறுவனத்திற்கும் இதேபோன்ற எச்சரிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.