கிரீன்லாந்து விவகாரத்தில், அடுத்தகட்டமாக அமெரிக்காவுக்கு ஐரோப்பிய யூனியனில் உள்ள மற்ற நாடுகளும் பதிலடி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்கா அடுத்த பார்வை கிரீன்லாந்து மீது விழுந்துள்ளது. கிரீன்லாந்துக்கு சமீபகாலமாகவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உரிமை கொண்டாடி வருகிறார். அதற்கு டென்மார்க்கும் கிரீன்லாந்தும் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், கிரீன்லாந்தை வசப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்ரூத் சமூகத்தளத்தில் ட்ரம்ப் பதிவு ஒன்றை இட்டுள்ளார். கிரீன்லாந்துக்கு ரஷ்யாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தலை டென்மார்க்கால் சமாளிக்க முடியாது என்பது உறுதியாகிவிட்டதாக ட்ரம்ப் கூறியுள்ளார். இந்தச் சூழலில் கிரீன்லாந்தை வசப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் அது செய்து முடிக்கப்படும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். கிரீன்லாந்தை அமெரிக்கா வசம் தர டென்மார்க் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதில் ஐரோப்பிய நாடுகள் டென்மார்க்குக்கு ஆதரவாக உள்ளன. இதனால் அமெரிக்கா, ஐரோப்பா இடையே பதற்ற நிலை எழுந்துள்ளது.
இதற்கிடையே, நகமும் சதையும் போன்றிருந்த அமெரிக்காவும் ஐரோப்பாவும் தற்போது எதிரும்புதிருமாக மாறியுள்ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகள்தான் இதற்குக் காரணம். கிரீன்லாந்து விவகாரத்தில் தங்களை ஆதரிக்காத ஐரோப்பிய நாடுகளுக்கு 10% வரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார் ட்ரம்ப். இதற்கு பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நெருங்கிய நாடுகளே எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் அடுத்தகட்டமாக அமெரிக்காவுக்கு ஐரோப்பிய யூனியனில் உள்ள மற்ற நாடுகளும் பதிலடி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரேட் பசூக்கா எனப்படும் பொருளாதார ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். ட்ரேடு பசூக்கா என்பது ஐரோப்பிய யூனியன் தனது வர்த்தக நலன்களை தற்காத்துக் கொள்வதற்காக உருவாக்கி வைத்துள்ள உச்சபட்ச பொருளாதார நடைமுறையாகும். இந்த ஆயுதத்தை ஐரோப்பிய யூனியன் முதல்முறையாக பிரயோகிக்கும் பட்சத்தில் அது அமெரிக்காவுடனான உறவை மேலும் சீர்குலைத்து உலக வர்த்தகத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.