இங்கிலாந்தில் வான்வழிப் போக்குவரத்தில் ஏற்பட்ட ஒரு சிக்கல் காரணமாக ஒருநாளில் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தச் சிக்கல் இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என்பதால் நாட்டின் வான்வழிப் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. என்ன நடக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்...
இங்கிலாந்தின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது NATS. நாட்டின் அனைத்து வான்வழிப் போக்குவரத்தையும் கட்டுப்படுத்தக் கூடிய இந்த நிறுவனத்தின் flight data processing system-ல் கண்டறியப்படாத ஒரு கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விமானங்களின் புறப்பாடு பாதிக்கப்பட்டது. நாட்டின் பரபரப்பான விமான நிலையங்களில் விமானங்கள் புறப்படாததால், வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டின் சில பகுதிகளில் இருந்து புறப்பட்டு பயணித்து வந்த பல விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
நாட்டின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான ஹீத்ரூ விமான நிலையத்தில் நேற்று மதியம் வரை எவ்வித பாதிப்புகளும் இன்றி விமானங்கள் இயங்கிவந்ததாக தெரிகிறது. ஆனால், மதியத்துக்குப் பின் விமானங்களின் புறப்பாட்டில் சிக்கல் எழுந்த நிலையில், தரையிறங்க வேண்டிய 13 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டதாகத் தெரிகிறது. இதேபோலத்தான் கேட்விக், மான்செஸ்டர் மற்றும் பெர்மிங்கம் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களிலும் சேவை பாதிக்கப்பட்டது. விமானங்கள் ஏதும் புறப்படாததால் நிலையங்களில் ஆங்காங்கே விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், சில விமானங்கள் ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் அண்டை நாடுகளான அயர்லாந்து, ஸ்காட்லாந்தில் இருந்து லண்டன் வர இருந்த விமானங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. தங்கள் நிறுவனத்தில் புக் செய்திருந்த 65,000 பயணிகள் 8 மணி நேரத்துக்கும் மேலாக காக்க வைக்கப்பட்டதாக ரயன் ஏர் என்ற நிறுவனம் சொல்லியிருக்கிறது. இதுபோல் பல நிறுவனங்கள் தங்கள் பயணிகளை பல மணி நேரம் காக்க வைத்துள்ளன. விமானம் தாமதமாவது குறித்து விமான நிலையப் பணியாளர்களிடம் கேள்வி எழுப்பிய பயணிகளிடம், சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டதால் பயணிகள் தவித்துப் போயினர்.
நாங்கள் நம்பியதைவிட பிரச்னையைச் சரிசெய்ய அதிக காலம் எடுக்கும் எனக்கூறி மன்னிப்பு கோரியுள்ளது NATS நிறுவனம். பிரச்னை அடையாளம் காணப்பட்டு தீர்ப்பதற்கான நடைமுறை தொடங்கியதா என்பது குறித்து சரிவர தெரியாமல் இருக்கும் நிலையில், பயணிகள் தங்களின் விமானம் குறித்த அப்போதைய அப்டேட்களை தெரிந்துகொண்டபின் வீட்டிலிருந்து புறப்பட வேண்டும் எனவும், ஏற்கெனவே தங்கள் அலுவலகங்கள் பிஸியாக இயங்கிவருவதால் தங்களை தொடர்புகொள்ள வேண்டாம் எனவும் கையை விரித்திருக்கின்றன விமான நிறுவனங்கள்.