உலகம்

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வைத்து ஆபாச படம் பார்த்த ஆளுங்கட்சி எம்.பி. ராஜினாமா!

ச. முத்துகிருஷ்ணன்

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வைத்து ஆபாசப் படம் பார்த்த ஆளுங்கட்சி எம்.பி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி ராஜினாமா செய்துள்ளார். பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி. நீல் பாரிஷ், 2010ஆம் ஆண்டு முதல் எம்.பியாக பதவி வகித்து வந்துள்ளார். அண்மையில் இவர் பாராளுமன்ற கீழவையின் (House of Commons) கூட்டத்தொடரின்போது தனது செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

நீல் பாரிஷ் தனது சக பெண் எம்.பிக்கு அருகில் அமர்ந்து ஆபாச படம் பார்த்ததை அந்த பெண் எம்.பி. ஊடகத்திடம் தெரியப்படுத்தினார். இதனால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. சர்ச்சை எழுந்ததை அடுத்து நாடாளுமன்றத்தில் வைத்து இரண்டு முறை ஆபாச படம் பார்த்ததை நீல் பாரிஷும் ஒப்புக்கொண்டார்.

“ஒரு இணையதளத்தில் டிராக்டர்களைத் தேடும் போது தற்செயலாகத் தடுமாறியதாகவும், பின்னர் நான் செய்யக்கூடாததை பார்க்கக் கூடாததை சிறிது நேரம் பார்த்தேன். ஆனால் என்னுடைய குற்றம், மிகப்பெரிய குற்றம் என்னவென்றால், நான் இரண்டாவது முறையாக அதைப் பார்த்தேன். அது வேண்டுமென்றே செய்யப்பட்டது. அது பைத்தியக்காரத்தனத்தின் தருணம்” என்று கூறினார் நீல் பாரிஷ். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்வேன் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் நெருக்கடி முற்றியதால் தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.