ஈரானில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு அவசர அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது. போராட்டங்களில் வன்முறை அதிகரித்து, பலர் உயிரிழந்ததால், இந்தியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்தியர்கள் தங்கள் பாஸ்போர்ட்டுகளை எப்போதும் உடன் வைத்திருக்கவும், தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஈரானில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சுடுவதற்கு உச்சத்தலைவர் அயதுல்லா அலி காமேனி உத்தரவு பிறப்பித்துள்ளார். பொருளாதாரச் சரிவு மற்றும் அடக்குமுறைக்கு எதிராகத் தொடங்கிய இந்தப் போராட்டம், இப்போது ஈரான் ஆட்சியையே உலுக்கி வருகிறது.
போராட்டத்தின்போது நடந்த வன்முறையில் இதுவரை இரண்டாயிரத்து 571 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சுடுவதற்கு ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி உத்தரவிட்டுள்ளார். போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்த ராணுவ வாய்ப்புகளை பரிசீலித்து வருகிறார்.
ஈரானில் நிலைமை மோசமாகி வரும் நிலையில், ஈரானில் இருக்கும் இந்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று இந்திய அரசின் தெஹ்ரான் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்கள், யாத்திரிகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட இந்தியர்கள் வணிக விமானங்கள் உட்பட கிடைக்கும் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி ஈரானைவிட்டு வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்க்கவும், ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும், உள்ளூர் ஊடகங்களை தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாஸ்போர்ட் மற்றும் அடையாள ஆவணங்களை எப்போதும் உடன் வைத்திருக்கவும், தேவையான உதவிக்காக இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரானில் சுமார் 10,000 இந்தியர்கள் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.