அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்புவுக்கும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்கிற்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக ட்ரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே எலான் மஸ்க் சமூக வலைத்தளம் மூலம் புதிய கட்சி அறிவிப்பு தொடர்பாக கருத்துக்கணிப்பு நடத்தினார். அதாவது, “அமெரிக்காவில் 80 சதவீத நடுத்தர மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு புதிய கட்சி தேவையா” எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்தக் கருத்துக்கணிப்பு 80 சதவிகித மக்கள் ‘ஆம்’ எனப் பதில் அளித்திருந்திருந்தனர். மேலும், இந்தக் கருத்துக்கணிப்பு நாடு முழுவதும் பேசுபொருளானது. இதையடுத்து எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் தொடங்க இருக்கும் புதிய கட்சிக்கு 'தி அமெரிக்கன் பார்ட்டி' என்ற பெயரையும் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக எலான் மஸ்க், “அமெரிக்காவில் தற்போதைய சூழலில் புதிய கட்சி தொடங்கலாமா என்று கருத்துக்கணிப்பு நடத்தினேன். அப்போது நடுத்தர மக்கள் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த ஒரு புதிய அரசியல் கட்சி தேவை என்று 80 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருப்பது விதி. கட்சியின் பெயரை 'தி அமெரிக்கன் பார்ட்டி' என்று சொல்வது நல்ல தொனியாக உள்ளது. உண்மையிலேயே அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக இது இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.