AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை கண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் ஏஐ துறைக்குள் நுழைய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இதை உறுதி செய்யும் வகையில் செயற்கை நுண்ணறிவு துறையில் புதிதாக ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளதாக இன்று அறிவித்திருக்கிறார் எலான் மஸ்க். அதற்கு 'TruthGPT' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிறுவனம், OpenAI நிறுவனத்திற்கு பெரும் போட்டியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'TruthGPT' நிறுவனத்திற்காக எலான் மஸ்க் தொழில்நுட்ப பொறியாளர்களையும், முதலீட்டாளர்களையும், அதிநவீன கருவிகளையும் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு எலான் மஸ்க் அளித்திருக்கும் பேட்டியில், ''இதுவே பாதுகாப்பிற்கான சிறந்த பாதையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வதில் அக்கறை கொண்ட ஒரு AI-ஆக இது இருக்கும். இது மனிதர்களின் ஆற்றலை அழிக்காது. ஏனென்றால் நாம் பிரபஞ்சத்தின் ஒரு சுவாரஸ்யமான பகுதியாக இருக்கிறோம்" என்றார்.