உலக பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய நாள் முதல், அதில் பல்வேறு மாற்றங்களையும், நிர்வாக சீர்திருத்தங்களையும் செய்தார். பல உயர்மட்ட ஊழியர்களையும் பணிநீக்கம் செய்திருந்தார். குறிப்பாக, ட்விட்டர் என்பதை ’எக்ஸ்’ என அதன் பெயரை மாற்றிய அவர், ப்ளூ டிக் பயனாளர்களுக்கு கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்தினார். அதோடு ட்விட்டரின் லோகோவாக நீல நிற குருவி இருந்துவந்த நிலையில், அதனையும் மாற்றினார்.
இந்த நிலையில், எலான் மஸ்க் தனது எக்ஸ் நிறுவனத்தை ரூ.2.82 லட்சம் கோடிக்கு விற்பனை செய்துள்ளார். அதாவது, எலான் மஸ்க் தனது சொந்த நிறுவனமான X AI நிறுவனத்துக்கு எக்ஸ் தளத்தை விற்பனை செய்துள்ளார். X AI நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் செயல்பட்டு வருகிறது. இரண்டு நிறுவனங்களும் எலான் மஸ்க்கால் தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்டு கட்டுப்படுத்தப்படுவதால், இந்த பரிவர்த்தனை பங்கு பரிமாற்றத்திற்கு சமமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தவிர, இந்த நிறுவனங்கள் அனைத்தும் பங்குச் சந்தையில் இணைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர், xAI-ன் மதிப்பு $80 பில்லியனாகவும், X-ன் மதிப்பு $33 பில்லியனாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பரிவர்த்தனை குறித்து எலான் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில், “தரவு, மாதிரிகள், கணினி, விநியோகம் மற்றும் திறமையை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இது மகத்தான ஆற்றலை உண்டாக்கும். அதே வேளையில், பில்லியன் கணக்கான மக்களுக்கு புத்திசாலித்தனமான, அர்த்தமுள்ள அனுபவங்களை வழங்க வழி வகுக்கும். எக்ஸ் ஏ.ஐ மற்றும் எக்ஸ்-இல் உள்ள அனைவரின் கடுமையான அர்ப்பணிப்பையும் நான் அங்கீகரிக்க விரும்புகிறேன், அது எங்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. இது வெறும் ஆரம்பம்தான்” என்று அதில் பதிவிட்டுள்ளார்.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் எலான் மஸ்க், 2022ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சுமார் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை (தற்போது எக்ஸ்) வாங்கினார்.