உலகம்

`தந்தையிடமிருந்து பிரிகின்றேன் ’- பெயரையும் மாற்றிக்கொண்ட எலான் மஸ்க்கின் திருநங்கை மகள்!

நிவேதா ஜெகராஜா

எலான் மஸ்க்கின் திருநங்கை மகள் (முன்பு ஆணாக இருந்தவர்), 18 வயதை அடைந்ததையொட்டி அவருடைய தந்தையிடம் இருந்து பிரிவதாக தெரிவித்துள்ளார். இதை உறுதிசெய்யும் வகையில், அவருடைய பாலின மாற்றத்துக்கு ஏற்ப அவரே பெயர் மாற்றம் செய்துகொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி அவருடைய பெயர் இனி விவியன் ஜென்னா வில்சன் என்று மாற்றப்படுவதாக TMZ என்ற செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

எலான் மஸ்கிற்கு, 18 வயதில் சேவியர் அலெக்ஸாண்டர் மஸ்க் என்ற மகன் இருந்தார். இவரது பாலினம் ஆண் என்று பிறப்பின் அடிப்படையில் அடையாளப்பட்டிருந்தது. சமீபத்தில் 18 வயதான அவர், இனி தான் தன்னுடைய உயிரியல் தந்தையுடன் (பிறப்புக்கு காரணமானவர்) வசிக்கப்போவதில்லை மற்றும் தொடர்பில் இருக்க போவதில்லை என்றும், ஆகவே இதை உறுதிசெய்ய தன்னுடைய பெயரை மாற்ற விரும்புவதாகவும் நீதிமன்றத்தை நாடியுள்ளார். அதன் தீர்ப்பில் அவருக்கு பெயர் மாற்றம் செய்துகொள்ள நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. அந்த அனுமதிப்படி விவியன் ஜென்னா வில்சன் என்று அவர் தன் பெயரை மாற்றிக்கொண்டுள்ளார்.

மஸ்க் மற்றும் அவரது திருநங்கை மகளுக்கு இடையே குடும்ப பிரச்னை இருப்பதாக சொல்லப்பட்டாலும்கூட, அதுதொடர்பான எந்த விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை. இவரது அம்மா, ஜஸ்டின் வில்சன் என்பவரை மஸ்க் கடந்த 2008-ம் ஆண்டு விவாகரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மஸ்கிற்கு, மொத்தம் எட்டு குழந்தைகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலொருவர் சமீபத்தில் உயிரிழந்திருந்தார்.

மஸ்க் முன்பொருமுறை திருநங்கைகளுக்கு ஆதரவாக வெளியிட்டிருந்த ட்வீட்கள் தற்போது பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. அந்த ட்வீட் ஒன்றில், தன்னை திருநங்கை என்ற அடைமொழியுடன் ஒருவர் அடையாளப்படுத்துவது மனக் கிளர்ச்சியினால் செய்யும் செயல் என்று விமர்சித்திருந்தார்.