Elon musk & Jensen Huang  Reuters
உலகம்

டெஸ்லாவுக்கு வருகிறாரா Nvidia CEO ஜென்சன் ஹுவாங்?

Nvidia நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங்கின் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அவரைத் தனது நிறுவனத்தில் பணியமர்த்தத் தயாராக இருப்பதாக டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

PT WEB

செய்தியாளர் - M.மீரா

என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங்கின் (Jensen Huang) பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அவரைத் தனது நிறுவனத்தில் பணியமர்த்தத் தயாராக இருப்பதாக ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது.

என்விடியா நிறுவனத்தின் இயக்குநர் குழு, ஜென்சன் ஹுவாங்கை CEO பதவியில் இருந்து நீக்குவது குறித்து ஆலோசித்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டிருந்தது. அவருக்கு எதிராக எழுந்துள்ள இரண்டு திருமணத்துக்கு மீறிய உறவுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளே இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.

elon musk

இந்தச் சூழலில், எக்ஸ் தளத்தில் ஒருவர், ஜென்சன் ஹுவாங்கை எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த மஸ்க் ஜென்சன் ஹுவாங்கை (Jensen Huang) வேலைக்கு எடுப்பது தனக்குக் கிடைக்கும் பெருமை என எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஹுவாங்கின் திருமணத்தை மீறிய இரண்டாவது உறவு குறித்தும் சர்ச்சை எழுந்துள்ளது. என்விடியாவின் சுகாதாரப் பிரிவு துணைத் தலைவரான கிம்பர்லி பவலுடன் அவருக்குத் தொடர்பு இருந்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இருவரும் ஒரு ஹோட்டலில் நெருக்கமாக இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Elon Musk

ஏற்கெனவே, சீன உளவு அமைப்புடன் தொடர்புடையவர் என அமெரிக்க உளவுத்துறை சந்தேகிக்கும் ஆலிஸ் ஹுவாங் என்ற பெண்ணுடன் ஜென்சன் ஹுவாங்குக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரங்கள் தொடர்பாக என்விடியா இயக்குநர் குழு விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், ஹுவாங்கின் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்பு தொழில்நுட்ப உலகில் அதிகரித்துள்ளது.