செய்தியாளர் - கார்த்திகேயன்
உலக பணக்காரர்களில் ஒருவராக உள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், ஸ்டார்லிங்க் என்ற அதிவேக இணையசேவை நிறுவனத்தை நடத்தி வருகிறார். செயற்கைகோள்கள் மூலம் இன்டர்நெட்டை இந்நிறுவனம் வழங்குவதால், உலகின் எந்தவொரு பகுதியில் இருந்தாலும் இணையசேவையை பெற முடியும். இந்த நிறுவனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த எலான் மஸ்க் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறார்.
ஆனால், புவிசார் அரசியல், பாதுகாப்பு காரணங்களுக்காக, ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு இந்திய அரசு அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆபத்தான காலகட்டத்தில், தங்களின் கட்டுப்பாட்டில் அந்த நிறுவனம் இயங்காது என்று எண்ணுவதாகவும் சொல்லப்பட்டது.
அந்த ஊடக செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்த ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்திய அரசுடன் ஆக்கபூர்வமான, தீவிரமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், ஆதாரமற்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியிருந்தது. பாதுகாப்புத்துறைக்கே பிரச்சனை வரும் என்பதால், இந்த திட்டம் இதுவரை நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒருமுறை வலையை வீசியுள்ளார் எலான் மஸ்க்.
அதாவது, டாஜ் டிசைனர் என்ற பிரபல எக்ஸ் பக்கத்தில், பதிவு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில், கடந்த மே மாத நிலவரப்படி, 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய கிராமங்களுக்கு இன்னும் 4 ஜி இணைய சேவை சென்றடையவில்லை என்றும், கிராமங்களில் டிஜிட்டல் இடைவெளி நிலவுவதையே இது காட்டுகிறது என்றும் கூறப்பட்டிருந்தது.
மேலும், நகர்ப்புறங்களில் 100 பேருக்கு 126 இணைய இணைப்புகள் இருக்கும் நிலையில், கிராமப்புறங்களில் இது 48 ஆக மட்டுமே உள்ளது என்றும் பதிவில் கூறப்பட்டிருந்தது. இந்த பதிவை ரீ போஸ்ட் செய்த எலான் மஸ்க், பின்தங்கிய பகுதிகளில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை வழங்க இந்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் கடைகோடியில் உள்ளவர்களுக்கும் இணையசேவை வழங்க, ஸ்டார்லிங்க் உதவும் என்றும், அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கம் செயற்கைகோள் சேவைகளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்புகளை உருவாக்கி வரும் வேளையில், எலான் மஸ்க் வெளியிட்டுள்ள இந்த பதிவு கவனம் ஈர்த்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இந்தியாவின் தொலைதூர மற்றும் பின்தங்கிய கிராமங்களுக்கு இணையத்தை கொண்டு சேர்ப்பதில் ஸ்டார்லிங்க் முக்கியப் பங்காற்ற முடியும் என்று மஸ்க் தரப்பில் கூறப்படுகிறது. அதே சமயம், இந்திய அரசின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை விதிகளை, அந்நிறுவனம் பின்பற்றுமா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.