அமெரிக்க அதிபராக 2வது முறையாகப் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அந்நாட்டிற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அமெரிக்க அரசு நிர்வாகத்தில் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் DOGE துறையில் தலைமை ஆலோசகராக உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை இயக்குநருமான எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். இவருடைய ஆலோசனையின் பேரில், ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. மேலும் சிலவற்றுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதி திட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து அதிபர் ட்ரம்புக்கு எதிராகவும், எலான் மஸ்கிற்கு எதிராகவும் அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, அரசுப் பணிக்கு ஒதுக்கப்படும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு, தனது டெஸ்லா கார் நிறுவன பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். எனினும், எலான் மஸ்கின் இந்த அறிவிப்பிற்கு பதில் அளித்த அதிபர் டொனால்டு ட்ரம்ப், ”எலான் மஸ்க்கை சிலர் மோசமாக நடத்தியதாகவும், சிறந்த தேசப்பற்றாளரான அவரை தன்னுடன் நீண்டகாலம் வைத்துக்கொள்ளவே தான் விரும்புகிறேன்” எனவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், டெஸ்லாவின் இயக்குநர் குழு தலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கின் அரசியல் ஈடுபாடு மற்றும் வருவாயில் 71 சதவீதம் சரிவு காரணமாக டெஸ்லாவின் இயக்குநர் குழு தலைமைத்துவ மாற்றத்தை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
மின்சார வாகன தயாரிப்பாளரின் பங்குகளில் ஏற்பட்ட சரிவு மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் அரசியல் விவகாரங்களில் அதிகரித்து வரும் ஈடுபாட்டால் முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் டெஸ்லா நிறுவனத்திற்கு புதிய CEO-வை தேர்ந்தெடுக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இதை எலான் மஸ்க் மறுத்துள்ளார். இதுகுறித்து, அந்தச் செய்தியை வெளியிட்ட பத்திரிகையைச் சுட்டிக்காட்டியிருக்கும் எலான் மஸ்க், ”ஒரு தவறான கட்டுரையை வெளியிடுவதும், டெஸ்லா இயக்குநர்கள் குழுவால் முன்கூட்டியே ஒரு தெளிவான மறுப்பைச் சேர்க்கத் தவறுவதும் மிகவும் மோசமான நெறிமுறை மீறலாகும்” எனப் பதிவிட்டுள்ளார்.
எலான் மஸ்க்கின் இந்தப் பதிவிற்குப் பிறகு, டெஸ்லாவின் வாரியத் தலைவர் ராபின் டென்ஹோம் ஒரு மறுப்பையும் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெஸ்லாவின் தலைமை தொடர்பாக வெளியான ஊடகச் செய்தி முற்றிலும் தவறானது. டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் மட்டுமே ஆவார். மேலும் வரவிருக்கும் அற்புதமான வளர்ச்சித் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தும் அவரது திறனில் வாரியம் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் வெளியேறுவது தொடர்பாக பேசிய ட்ரம்ப், “இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் எலான் மஸ்க்கை உண்மையிலேயே மதிக்கிறார்கள், பாராட்டுகிறார். எலான் மஸ்க் விரும்பும் வரை வெள்ளை மாளிகையில் பணியாற்றலாம்” எனத் தெரிவித்துள்ளார்.