எனது விந்தணுவுக்கு அதிக அளவு போட்டியுள்ளது என எலான் மஸ்க்கின் தந்தை எரோல் அளித்த சர்ச்சை பேட்டி இணையத்தில் பரவி பலரின் கவனத்தையும் பெற்றுவருகிறது.
உலகின் கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும் எலான் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க். இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது 35 வயது வளர்ப்பு மகளுடன் ரகசியமாக குழந்தை பெற்றுக்கொண்டதாகக் கூறியது சமூக ஊடகங்களில் செய்தி பரவி வைரலானது. இந்நிலையில் 76 வயதான தென் ஆப்ரிக்க என்ஜினீயரான அவர் மீண்டுமொரு சர்ச்சையை கிளப்பியுள்ளார். ’’நாம் பூமியில் இருப்பதற்கு ஒரே காரணம் இனப்பெருக்கம் செய்வது மட்டுமே’’ என்று அவர் ஒரு நேர்காணலில் தெரிவித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
’தி சன்’ என்ற கொலம்பியன் நிறுவனம் அவரிடம் எலானின் புதிய தலைமுறைகளை உருவாக்க அவரை விந்தணு தானம் அளிக்கச்சொல்லி அணுகியதாகக் ஒரு பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில், ‘’உயர் வர்க்க கொலம்பியன் பெண்களை கருவுறச்செய்ய எனது விந்தணுவை தானம் அளிக்கச்சொல்லி கொலம்பியன் நிறுவனம் ஒன்று என்னை அணுகியது. எலானை உருவாக்கிய நபரே இருக்கையில் ஏன் எலானிடம் செல்லவேண்டும்?’’என்று கூறியுள்ளார்.
மேலும், விந்தணு தானம் செய்ய அவருக்கு எந்த தொகையும் வழங்குவதாக அந்த நிறுவனம் குறிப்பிடவில்லை எனவும், அதற்கு ஈடாக, முதல் வகுப்பு பயணம் மற்றும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கும் வசதி உள்ளிட்ட பல சலுகைகளை வழங்க முன்வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வெளியானதிலிருந்து நெட்டிசன்கள் பலரும் எரோலை ரோஸ்ட் செய்து வருகின்றனர். சிலர் அவர் கூறியதில் தவறேதும் இல்லை என ஆதரவான பதிவுகளையும் இட்டு வருகின்றனர்.
ஏற்கெனவே வளர்ப்பு மகளிடமே அவர் குழந்தை பெற்றுள்ளதை அவரே வெளிப்படுத்தியதை குறிப்பிட்டு பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.
1979ஆம் ஆண்டு எலான் மஸ்க்கின் தாயார் மாயே ஹல்தேமனை பிரிந்தபிறகு எரோல், ஹைதீ பெசுதேன்ஹௌட் என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். ஹைதீயின் குழந்தைதான் ஜனா. ஜனா தவிர, இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஜனாவிடமிருந்து 2019ஆம் ஆண்டு பெண்குழந்தை ஒன்றை பெற்றுள்ளார். 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு எரோலும் ஹைதீயும் விவாகரத்து பெற்றுக்கொண்டதாக நியூ யார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.