தண்ணீர் குடிக்க முயன்றபோது குளத்தில் தவறி விழுந்த யானைக்குட்டியை பதறியடித்துப் போன தாய் யானையும், மற்றொரு யானையும் குளத்தில் குதித்து காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
தென்கொரியாவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் குட்டி யானை ஒன்று தனது தாய் யானையுடன் அங்கிருந்த குளத்திற்கு தண்ணீர் குடிக்க சென்றுள்ளது. குட்டி யானை குளத்திற்குள் எட்டி தண்ணீர் குடிக்க முயன்ற போது ஏதேச்சையாக தவறி விழுந்தது. இதனால் பதறியடித்த தாய் யானை, குட்டி யானையை தனது தும்பிக்கையால் காப்பாற்ற முயன்றது. இதனைக் கண்ட அருகிலிருந்த மற்றொரு யானையும் ஓடிவந்து, குட்டியானையை தும்பிக்கையால் காப்பாற்ற முயன்றது. ஆனால் இரண்டு யானைகளின் முயற்சியும் பலன்கொடுக்கவில்லை.
இதனால் ஒருநிமிடம் கூட தாமதிக்காத இரண்டு யானைகளும் குளத்தின் வாசல் வழியாக தங்களது உயிரையும் பொருட்படுத்தாது அவசர அவசரமாக இறங்கியது. தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த குட்டி யானையை, இரண்டு யானைகளும் ஒன்றுசேர்ந்து பத்திரமாக மீட்டு கரைசேர்த்தது. குட்டி யானை தவறி விழுந்ததை கண்ட மற்றொரு யானையும் அந்த குட்டி யானையை காப்பாற்றும் பொருட்டு அங்கும் இங்கும் வேகமாக ஓடியது. ஆனால் அங்கு வேலி அமைக்கப்பட்டிருந்தால் அதனால் அங்கு வர இயலவில்லை. மனதை நெகிழ வைக்கும் இந்தசம்பவம், பூங்காவில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.