ஆழ்ந்த உறக்கம் கொண்டிருந்த குட்டி யானையை தாய் யானை எழுப்பப் முடியாமல் பரிதவித்து நிற்க, மிருகக்காட்சிசாலை பராமரிப்பாளர்கள் வந்து தட்டி எழுப்பிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
செக் குடியரசு நாட்டிலுள்ள ப்ராக் மிருகக்காட்சிசாலையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 47 நொடிகள் கொண்ட அந்த வீடியோவில், யானைக் குட்டி ஒன்று தரையில் படுத்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறது. அதன் தாய் யானை அருகில் நின்று தும்பிக்கையால் தொட்டு தனது குட்டியை எழுப்பிவிட முயற்சிக்கிறது. ஆனால் அந்த யானைக்குட்டியோ அசைவின்றி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது.
இதையடுத்து தாய் யானை பரிதவித்து நிற்பதைப் பார்த்த அங்கிருந்த பூங்கா பராமரிப்பாளர்கள் வந்து, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த யானைக்குட்டியை தட்டி விட்டும் கிச்சுகிச்சு மூட்டியும் எழுப்ப முயன்ற பிறகே தூக்கத்திலிருந்து வேகவேகமாக எழுந்து தனது தாயை நோக்கி ஓடியது.