உலகெங்கும் புதுப்புது நவீன மின்னணு தொழில்நுட்ப பொருட்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றை ஒரே இடத்தில் காண நேர்ந்தால் எப்படி இருக்கும். அது போன்ற ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது அமெரிக்காவின் லாஸ் வேகாசில் தற்போது தொடங்கியுள்ள சர்வதேச மின்னணு சாதன கண்காட்சி, 160 நாடுகளை சேர்ந்த 4 ஆயிரத்து 500 நிறுவனங்கள் இங்கு தங்கள் அரங்கை அமைத்துள்ளன.
உடற் பயிற்சிக்கு உதவுவதுடன் வலிமையை அளவிடவும் உதவும் ஜிம் மோன்ஸ்டர் என்ற சீன நிறுவனத்தின் சாதனம் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. தென் கொரிய நிறுவனமான எல்ஜியின் 4K OLED வயர்லஸ் டிவி பார்வையாளர்களை பிரமிக்க வைக்கிறது.
ஜீனி என்ற ரோபோ நாய் இந்த கண்காட்சியின் ஹைலைட்டுகளில் ஒன்று. கட்டளைக்கு ஏற்றவாறு இந்த நாய் செயல்படும் என்றும் மூத்த குடிமக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றும் தன்மை கொண்டது எனவும் கூறுகிறார் இதை உருவாக்கிய டாம் ஸ்டீவன்ஸ்.
மேலும், தனிமையால் அவதிப்படுபவர்கள், மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு இது பெரிதும் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். ஒன்றே கால் லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட இந்த ரோபோ நாயை விலைக்கு விற்பதுடன் வாடகைக்கும் விடப்படுகிறது.
வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்த ஏஐ தொழில்நுட்பத்துடனான டிஜிட்டல் புத்தகமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் புத்தகத்தில் எந்த மொழியில் எழுதப்பட்ட புத்தகத்தையும் பதிவேற்றி படிக்க முடியும்.
பயோ லெக் என்ற நிறுவனம் தயாரித்துள்ள மின்னணு கால் உடல் ஊனமுற்றவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனக்கூறப்படுகிறது. வழக்கமான செயற்கை கால்கள், கைகளை விட இது மிகவும் பயனுள்ளது எனவும் இயற்கையான கை, கால்கள் உள்ளதை போன்ற அனுபவத்தை இது தரும் என்றும் கூறப்படுகிறது.
தனிமையில் வாடுபவர்களுக்கு அவர்களின் மன நிலைக்கு ஏற்ப உரையாடும் மின்னணு சாதனமும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த கருவி ஜப்பானில் மருத்துவமனைகளில் யாரின் துணையும் இன்றி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பெரிதும் உதவுவதாக இதை தயாரித்த நிறுவனம் கூறியுள்ளது...