Egyptian swimmer Shehab Allam
Egyptian swimmer Shehab Allam guinness world records page
உலகம்

கைகளில் விலங்கு பூட்டி 11 கிலோ மீட்டர் நீந்திய எகிப்து வீரர்! வித்தியாசமான கின்னஸ் சாதனை!

Prakash J

உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது, நீச்சல். அதனால்தான் நீச்சல், விளையாட்டுப் போட்டிகளிலும் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நீச்சல் மூலம் இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் உருவாகிறார்கள். அத்துடன், அவர்கள் நீச்சலிலேயே பல்வேறு வகைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர்.

Egyptian swimmer Shehab Allam

குறிப்பாக, கைகள் இல்லாமல் நீந்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால், இன்று கைகள் இல்லாத மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள்கூட இதில் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில், எகிப்து நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர், தன் கைகள் விலங்கு பூட்டப்பட்ட நிலையில், 11 கிலோ மீட்டர் தூரம் வரை நீந்திச் சென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் ஷேகப் அல்லாம் (Sehab Allam). 31 வயது நிறைந்த நீச்சல் வீரரான இவர், கையில் விலங்கு பூட்டப்பட்ட நிலையில் 11.649 கிலோ மீட்டர் தூரம் நீந்திச் சென்று உலக சாதனை படைத்துள்ளார். இந்தச் சாதனையை அவர் சரியாக 6 மணி நேரத்தில் முடித்துள்ளார்.

Egyptian swimmer Shehab Allam

அரேபிய நாட்டில் நடைபெற்ற திறந்தவெளி நீச்சல் போட்டியின்போதுதான் இத்தகைய சாதனையை அவர் படைத்துள்ளார். தவிர, அவர் இவ்வாறு நீந்திச் சென்றபோதுகூட, உதவி படகுகள் தன்னைப் பின் தொடர்வதற்கும் மறுத்துவிட்டார். இதன்மூலம், 2021இல் அமெரிக்க வீரர் பெஞ்சமின் காட்ஸ்மேன் என்பவர், 8.6 கிலோ மீட்டர் தூரம் வரை நீந்தியிருந்த சாதனையை முறியடித்தார்.

இந்த சாதனை குறித்துப் பேசிய ஷேகப் அல்லாம், “போட்டிக்காக, இப்படி நான் கைவிலங்குடன் பயிற்சி செய்யும்போது ​அதைப் பார்க்க கூட்டம் கூடிவிடும். இதனால்தான், நான் அமைதியான பகுதிகளில் நீந்த விரும்புகிறேன். பொதுவாக கடற்கரைகளின் ஓரங்களில் நான் பயிற்சி எடுப்பேன். போட்டி முடிந்து சான்றிதழை கையில் வாங்கும் வரை என்னால் எதையும் உணர முடியவில்லை. தற்போது உலக சாதனை படைத்த நீச்சல் வீரராக இருப்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. என்னால் முடிந்தவரை இந்த சாதனையை தக்கவைக்க முயற்சி செய்வேன்” என்றார்.

guinness world records logo

அவரது சாதனை குறித்து கின்னஸ் அமைப்பு, ”6 மணி நேரத்தில் ஷேகப்பால் படைக்கப்பட்ட இச்சாதனை அசாத்தியமானது. இவரது சாதனை உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்” என தெரிவித்துள்ளது.