உலகம்

ஈகுவடார் சிறை கலவரத்தில் 116 கைதிகள் உயிரிழப்பு

கலிலுல்லா

ஈகுவடார் சிறைக்குள் ஏற்பட்ட கலவரத்தில் 116 கைதிகள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், கைதிகளின் உறவினர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் சிறை வளாகத்திற்கு வெளியே காத்து கிடக்கின்றனர்.

லத்தீன் அமெரிக்க நாடான ஈகுவடார் நாட்டில் உள்ள மத்திய சிறையில் கடந்த செவ்வாய் கிழமை அன்று திடீரென கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. வெடிகுண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதாகவும், இதனால் பயங்கர கலவரம் மூண்டதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில் 116 கைதிகள் உயிரிழந்த நிலையில், பலரது முகங்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், கைதிகளின் உறவினர்கள், மிகுந்த கவலை தோய்ந்த முகத்துடன் சிறை வளாகத்திற்கு வெளியே காத்து கிடக்கின்றனர். சிறைக்குள் கலவரம் மூண்டதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மோதல் ஏற்பட்டதும் ஏராளமான போலீசார் அங்கு அனுப்பி வைக்கப்பட்டதால், தற்போது பதற்றம் தணிந்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. கலவரம் தொடர்பான முழு விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.