உலகம்

வங்கதேசத்தில் இந்து கோயில்கள் மீது தாக்குதல்: 4 பேர் பலி, 100 பேர் கைது

கலிலுல்லா

வங்கதேசத்தில் இந்து கோயில்கள் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களில் இதுவரை100 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்து கோயில்கள் சூறையாடப்பட்டதால், பதற்றம் நிலவும் 22 மாவட்டங்களில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனா உறுதியளித்துள்ளார். இந்து கோயில்கள் மற்றும் நவராத்திரி விழா நடைபெறும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தினால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தலைநகர் டாக்காவில் இருந்து நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கமிலா என்ற பகுதியில் நவராத்திரி விழாவுக்கான பந்தலை இந்துக்கள் அமைத்திருந்தனர்.

இந்நிலையில், அங்கு திடீரென குவிந்த சமூக விரோதிகள், விழா பந்தலை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். மேலும், அண்டை மாவட்டங்களான ஹாஸிகஞ்ச், ஹாத்தியா, பன்ஷ்காளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த இந்து கோயில்களும் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டன. சமூக ஊடகங்களில் பரவிய தவறான தகவலே மத ரீதியான கலவரம் வெடிக்க காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே நவராத்திரி விழாவை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக வங்கதேசத்தில் இருக்கும் இந்து மதத் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.