உலகம்

விழாக்கோலத்தில் துபாயின் குளோபல் வில்லேஜ்: மக்களைக் கவரும் சிறப்பு நிகழ்ச்சிகள்..!

விழாக்கோலத்தில் துபாயின் குளோபல் வில்லேஜ்: மக்களைக் கவரும் சிறப்பு நிகழ்ச்சிகள்..!

webteam

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் ஷேக் முகம்மது பின் சையத் சாலையில் அமைந்திருக்கிறது குளோபல் கிராமம். இங்கு 90 நாடுகளைச் சேர்ந்த பண்பாட்டு அடையாளங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இடம், உலகின் மிகப்பெரிய சுற்றுலா, ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு பூங்காவாகக் கருதப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட பண்பாடு, பொழுதுபோக்கு, குடும்பம் மற்றும் ஷாப்பிங் பூங்கா இதுதான். ஒவ்வொரு ஆண்டும் இங்கு 50 லட்சம் மக்கள் வந்து செல்கின்றனர். இந்த குளோபல் கிராமம் 17, 200,000 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.

சர்வதேச பொழுதுபோக்குக் கிராமத்தில்  வெள்ளி விழா கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. இங்கு லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் புதிய நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ரஷ்யா, கம்போடியா மற்றும் வியட்நாம் நாடுகளின் பண்பாட்டு அடையாளங்களும் புதிதாக வைக்கப்பட்டுள்ளன.

பூங்கா முழுவதும் 3,500 விற்பனை நிலையங்கள் இருக்கின்றன. தனித்துவமான பண்பாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தைத் தரும். மேலும் புகழ்பெற்ற சர்வதேச நிறுவனங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மக்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் பல வித்தியாசமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு குளோபல் கிராமத்தில் பஞ்சமில்லை.

துபாய் அரசின் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளும் கட்டுப்பாடுகளும் பின்பற்றப்படுகின்றன.

கொரோனா பரிசோதனைகளுக்குப் பிறகு மக்கள் குளோபல் கிராமத்தில் அனுமதிக்கப்படுவார்கள். முதன்முறையாக நேரடியாக கட்டணம் செலுத்தும் முறைக்குப் பதிலாக, புதிய முறை செயல்படுத்தப்படுகிறது. இங்கு வரும் குழந்தைகளுக்கு இலவச முகக்கவசம் வழங்கப்படும்.

பூங்கா முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்படும். வாகனங்களை பார்க் செய்வதற்கு கூடுதலாக சிறப்பு வசதிகள் உண்டு. அதற்காக விஐபி பேக்கேஜ் முறைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

ஏப்ரல் 2021 வரையில் குளோபல் வில்லேஜ் நுழைவுக்கட்டணம் உயர்த்தப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.