Dubai Reuters
உலகம்

துபாய் மன்னரின் சகோதரர் மரணம்.. அதிர்ச்சியடைந்த உலக நாடுகள்.. நடந்தது என்ன?

துபாய் மன்னரின் சகோதரர் மரணம் அடைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

PT WEB

செய்தியாளர் - கார்த்திகேயன்

உலகின் பெரும்பாலான நாடுகளில் ஜனநாயக ஆட்சிமுறைதான் உள்ளது. இருப்பினும், இறையான்மை கொண்ட 43 நாடுகளில், இன்னும் மன்னர் ஆட்சி நடைமுறையில் இருந்துகொண்டுதான் உள்ளது. சவூதி அரேபியா, ஓமன், புருனே, சுவாசிலாந்து போன்ற நாடுகளில், இன்னும் மன்னராட்சிதான் இருந்து வருகிறது. மன்னர் குடும்பத்தில் உள்ள ஒருவர் இறந்துவிட்டால், அந்த நாடுகளில், துக்கம் அனுசரிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் மன்னரின் சகோதரர் இறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

Dubai ruler's brother

அதாவது, ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமதுவின் இளைய சகோதரர்தான் ஷேக் அகமது மக்தூம். துபாய் காவல் மற்றும் பொது பாதுகாப்புத் துறையின் துணை தலைவராகப் பதவி வகித்து வந்த ஷேக் அகமது, இன்று (செப்.21) காலை உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, துபாயில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என துபாய் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அவரது இறப்புக்கான காரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை குறிப்பிடப்படவில்லை. ஷேக் அகமதுவின் இறப்பு குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதால், நாட்டில் உள்ள அனைத்து தேசியக் கொடிகளும், அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, துபாய் மன்னர் வெளியிட்டுள்ள பதிவில், ’எனது சகோதரர் மீது இறைவன் கருணை காட்டட்டும். இறைவன் அவர் மீது கருணையை பொழிவான். அவர் இப்போது சர்வ வல்லமையுள்ள இறைவனின் மடியில் இருக்கிறார். அவர் எங்கள் பார்வையைவிட்டு மறைந்துவிட்டாலும், எங்கள் பிரார்த்தனைகளிலும் இதயங்களிலும் என்றென்றும் நிலைத்திருப்பார்” என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.