உலகம்

"கனவுகளை அடைய கடும் உழைப்பு தேவை"- அரபு மண்ணின் முதல் பெண் கைரேகை நிபுணர்

webteam

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல்முறையாக துபாய் காவல்துறையில் அனூத் அப்துல் ரஹ்மான் அல் நாசர் என்ற பெண் கைரேகை நிபுணராக நியமனம் செய்யப்பட்டிருப்பது பெருமையாகப் பார்க்கப்படுகிறது. கடந்த எட்டு மாதங்களாக அவர் துபாய் காவல்துறையில் பணியில் இருக்கிறார்.

ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று அரபு நாடுகளில் மகளிர் தினம் கொண்டாடப்படும் வேளையில், காலிஜ் டைம்ஸ் இணையதளம் சிறப்புச் செய்தியை வெளியிட்டு முதல் கைரேகை நிபுணரை கெளரவப்படுத்தியுள்ளது. துபாயில் நடந்துள்ள கொலை கொள்ளை மற்றும் தற்கொலைச் சம்பவங்களில் உண்மைகளைக் கண்டறிவதில் அவர் பெரும் பங்கு வகித்து வருகிறார்.

பொதுவாக குற்றச் செயல்களில் கிடைக்கும் சான்றுகளில் இருந்து சந்தேகத்திற்கு உரியவர்கள் விட்டுச்செல்லும் துப்புகளைக் கண்டுபிடிப்பதற்கு அறிவியல் மனம் வேண்டும். கூடுதல் கவனத்துடன் புலனாய்வுப் பிரிவில் சிறப்பாகச் செயல்பட்டு குற்றங்களை துப்புதுலக்க காவல்துறைக்கு அனூத் உதவிவருகிறார்.

ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த அவர், ஆறு மாதப் பயிற்சிக்கும் பிறகு சென்ற ஆண்டின் டிசம்பர் மாதத்தில் காவல்துறையில் இணைந்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பெண்ணாக இருப்பது பெருமைக்குரிய விஷயம் என்று கூறும் கைரேகை நிபுணர் அனூத், "அனைத்துப் பெண்களுக்கும் என் ஆலோசனை இதுதான்: கடினமாக உழைக்கவேண்டும். நம்முடைய கனவுகளை அடைவதற்கான எந்த முயற்சியையும் விடக்கூடாது. உங்களிடம் சரியான லட்சியம் இருந்தால், ஒருநாள் அதை அடைவீர்கள் " என்று தெரிவித்துள்ளார்.