தூய்மை பணியாளர் வரைந்த காய்ந்த இலைகளால் ஆன இதயம் இணையத்தில் வைரலானது
தெலங்கானாவைச் சேர்ந்த ரமேஷ் கங்கராஜம் காந்தி என்பவர் துபாயில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். ரமேஷின் மனைவி, தாய், தந்தை அனைவரும் இந்தியாவில் உள்ள நிலையில் ரமேஷின் நினைவுகளும் இந்தியாவிலேயே இருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டுதான் அவர் வரைந்த காய்ந்த இலைகளால் ஆன இதயம்.
தனது வழக்கமான பணியான சாலையோரங்களில் உள்ள காய்ந்த இலைகளை சேகரித்து அள்ளிக் கொண்டு இருந்தார். அப்போது தனது மனைவியின் நினைவு வந்ததால் அந்த காய்ந்த இலைகளை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு இதயம்போல் வரைந்துள்ளார். பின்னர் அதனைக் கூட்டி சேகரித்து சென்றுவிட்டார். ஆனால் அவர் இதயம் வரைந்த நேரத்தில் அதனை போட்டோ எடுத்த யாரோ இணையத்தில் பதிவிட்டனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி உள்ளது.
இது குறித்து கல்ஃப் நியூஸ்க்கு பேசிய ரமேஷ், அந்த இதயம் வரைந்த போது என் மனைவியைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டு இருந்தேன். நான் அவளை மிஸ் செய்கிறேன். நான் அவளது நினைவில் தான் இருப்பேன் என அவளுக்கும் தெரியும் என தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த மாதம் விடுமுறையில் நான் ஊருக்குச் செல்லவுள்ளேன். என் குடும்பத்துடனும், மனைவியுடனும் நான் நேரத்தை செலவழிப்பேன் என தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லதாவை திருமணம் செய்தார் ரமேஷ். திருமணமான ஒரே மாதத்தில் அவர் துபாய்க்கு பணிக்கு வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.