ட்ரோன் தாக்குதல்
ட்ரோன் தாக்குதல் ட்விட்டர்
உலகம்

ரஷ்யா மீது உக்ரேன் மீண்டும் ட்ரோன் தாக்குதல் - தீப்பற்றி எரிந்த Il-76 ரக போக்குவரத்து விமானங்கள்!

Prakash J

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த ஆண்டு (2022) பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர் ஓர் ஆண்டைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தற்போது மீண்டுமொரு ட்ரோன் தாக்குதல் நடந்திருக்கிறது. ரஷ்யத் தலைநகரான மாஸ்கோ மற்றும் அதைச் சுற்றியிருக்கும் ஒரியோல், பிரையன்ஸ்க், ரியாசான், கலுகா ஆகிய பகுதிகளிலும், மேற்கு ப்ஸ்கோவ் பகுதியிலுள்ள விமான நிலையத்தையும் ட்ரோன் மூலம் உக்ரைன் தாக்கியிருக்கிறது. இதனால், பல இடங்களில் தீ பரவியிருக்கிறது. குறிப்பாக ப்ஸ்கோவ் விமான நிலையத்தின் பெரும்பகுதி தீயில் கருகியது. இதனால் ரஷ்யாவில் உயிர்ச்சேதம் இல்லை என்றாலும், கட்டடங்கள் போன்றவை சேதமடைந்துள்ளன.

இந்தத் தாக்குதலில், நான்கு Il-76 ரக போக்குவரத்து விமானங்கள் தீப்பற்றியிருக்கின்றன. ஆறு பிராந்தியங்களை இலக்காக வைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 18 மாதங்களில் ரஷ்யா மீதான மிகப்பெரிய தாக்குதல் இது எனக் கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையே போர் தாக்குதல் சற்று குறைந்த இந்த நேரத்தில், இந்த வான்வெளி தாக்குதல் மேலும் போர் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.