பஹாமாஸை தாக்கிய டொரியன் புயல் தற்போது அமெரிக்காவை அச்சுறுத்தி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அபாகோ தீவுகளில் உள்ள எல்போ கே என்ற பகுதியில் கரையை கடந்த டொரியன், அடுத்ததாக பஹாமாஸை தாக்கியது. மணிக்கு 295 கிலோ மீட்டர் முதல் 354 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்றால், சாலைகளில் இருந்த மரங்கள், மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. வீடுகளில் இருந்த மேற்கூரைகளும் பறந்துச் சென்றன.
அடுத்ததாக அமெரிக்காவின் ஃபுளோரிடா மற்றும் வடக்கு கரோலினாவை நோக்கி இப்புயல் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஃபுளோரிடா, ஜார்ஜியா மற்றும் கரோலினாவில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தேவையான உணவுகள், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அங்கு குவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டொரியன் புயலின் வீரியத்தை நாசா விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது.