ட்ரம்புவுக்கு உறுதியாக நோபல் பரிசு வழங்கப்படாது என அதன் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில், நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் இன்று தொடங்கி அக்டோபர் 13ஆம் தேதிவரை அறிவிக்கப்பட இருக்கிறது. இதில் அமைதிக்கான நோபல் பரிசு அக்டோபர் 10ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமைதிக்கான நோபல் தனக்குக் கிடைக்காது என ஆரம்பத்தில் கூறிவந்த நிலையில், தற்போது அதை தனக்குக் கொடுங்கள் என மறைமுகமாகக் கேட்கத் தொடங்கிவிட்டார். அதற்காக, தனக்கு வழங்க பரிந்துரைக்கும்படி அவர் பல நாடுகளை மறைமுகமாக வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற அவர், இந்தியா-பாகிஸ்தான், கம்போடியா-தாய்லாந்து, இஸ்ரேல்-ஈரான், கொசோவோ-சொ்பியா, காங்கோ-ருவாண்டா, எகிப்து-எத்தியோப்பியா, ஆா்மீனியா-அஜா்பைஜான் நாடுகளுக்கு இடையிலான போா்களை நிறுத்தியதாகத் தொடர்ந்து கூறிவருகிறார். அதிலும் இந்தியா - பாகிஸ்தான் போரை தாமே நிறுத்தியதாக, இதுவரை 30க்கும் மேற்பட்ட முறை கூறியுள்ளார்.
மேலும், உக்ரைன் - ரஷ்யா மற்றும் காஸா - இஸ்ரேல் இடையே போரை நிறுத்துவதற்கு தாம் முயற்சிகள் மேற்கொண்டு வருவதன் காரணமாகவும் தனக்கு நோபல் பரிசு அளிக்கப்பட வேண்டும் என அவர் சமீபகாலமாகத் தெரிவித்து வருகிறார். இதையடுத்து, ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என பாகிஸ்தான், இஸ்ரேல், கம்போடியா, அர்மேனியா, அஜர்பைஜான் ஆகிய நாடுகள் வலியுறுத்தி வருவதுடன், அது தொடர்பாக நோபல் கமிட்டிக்கு பரிந்துரைக் கடிதங்களையும் அவர்கள் அனுப்பியுள்ளனர். இதையடுத்து, விரைவில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், அது ட்ரம்ப்க்கு வழங்கப்படுமா என்கிற விவாதங்களும் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன. ஆனால், அவருக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை என்ற தகவல்களும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில், காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக அதிபர் ட்ரம்ப், 20 அம்ச திட்டத்தை அறிவித்துள்ளார். அது, நிறைவேறும்பட்சத்தில், தான் நிறுத்திய போர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துவிடும் என்றும், இதுபோன்ற செயற்கரிய செயல்களை யாராலும் செய்ய முடியாது என்றும், இதற்காக தனக்கு நோபல் பரிசு தந்தே ஆகவேண்டும் என்றும் தெரிவித்தார். ஆனால், அந்த விருதை வேறு யாராவது ஒருவர்தான் பெறுவார் என்றும் அதுபோன்று நடந்தால் அமெரிக்காவுக்கே அவமானம் என்றும் தன் குமுறலைத் தெரிவித்திருந்தார்.
எனினும் ட்ரம்ப்புக்கு நோபல் கவுரவம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவே என இவ்விருதுகள் குறித்து கூர்ந்து கவனித்துவரும் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் உள்ள அமைதி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் நினா கிரேகர் (NINA GRAEGER) தெரிவித்துள்ளார். அதே நேரம் அமெரிக்காவில் கல்வி நிறுவனங்களுக்கான சுதந்திரங்களை ட்ரம்ப் மறுப்பதாக அமைதிக்கான நோபல் பரிசு கமிட்டி உறுப்பினர் ஒருவரே கூறியுள்ளதும் கவனம் பெறுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் நோபல் பரிசுக்காக ஆயிரக்கணக்கான பெயர்கள் முன்மொழியப்படுகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கான பட்டியலில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், நேட்டோ, ஹாங்காங் ஆர்வலர் சௌ ஹாங்-டங் மற்றும் கனேடிய மனித உரிமை வழக்கறிஞர் இர்வின் கோட்லர் உட்பட 338 நபர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். டொனால்டு ட்ரம்ப் போன்ற சில தலைவர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவருடைய பெயர், ஜனவரி 31க்குப் பிறகு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, நோபல் விதிகள்படி அவை செல்லாது எனக் கூறப்படுகிறது. அதாவது, 2025 பரிசுக்கான பரிந்துரை காலக்கெடு ஜனவரி 31 ஆகும்.
மேலும் அவை 2026ஆம் ஆண்டுக்கு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆகையால், ட்ரம்ப்க்கான நோபல் வாய்ப்பு என்பது மிகவும் குறைவாகவே இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். முன்னதாக, இறுதிப் பட்டியலில் அவரது பெயரைச் சேர்க்காததுடன், ஐந்து பேர் கொண்ட நோபல் குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் அவரது பரிந்துரைக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை, ட்ரம்ப்க்கு நோபல் பரிசு அறிவிக்கப்படாவிட்டால், அது நார்வேவுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே அமெரிக்காவின் 15% வரியை அனுபவித்து வரும் நார்வேக்கு இது மேலும் அதிகரிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. உறவுகளிலும் பேச்சுவார்த்தைகளிலும் சிக்கலை உண்டாக்கலாம் எனவும் கூறப்படுகிறது.