ஹமாஸ், ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

காஸா போர் நிறுத்த 20 அம்ச திட்டம்.. கெடு விதித்த ட்ரம்ப்.. ஹமாஸ் சொல்வது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் காஸா திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அரபு மற்றும் முஸ்லிம் தேசியத் தலைவர்களிடமிருந்து ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

Prakash J

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் காஸா திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அரபு மற்றும் முஸ்லிம் தேசியத் தலைவர்களிடமிருந்து ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேல் - காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் பலவும் ஒருசேர குரல்கொடுத்து வரும்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது 20 அம்ச அமைதித் திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளார். இப்பரிந்துரையில், போர் நிறுத்தம், ஹமாஸிடம் பிடிப்பட்டிருக்கும் பிணைக்கைதிகளை 72 மணி நேரத்திற்குள் விடுவித்தல், இஸ்ரேல் படிப்படியாக காஸாவிலிருந்து வெளியேறுதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது. அதேநேரத்தில், காஸாவில் மறுகட்டமைப்புக்கு உறுதியளிக்கும் இந்தப் பரிந்துரை, பாலஸ்தீன அரசமைப்பிற்கு எந்தப் பாதையையும் அமைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதை பிரெஞ்சு, இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி, பாகிஸ்தான், ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில், சவூதி அரேபியா, ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, துருக்கி, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் வரவேற்றுள்ளன.

நெதன்யாகு, ட்ரம்ப், ஹமாஸ்

அதேபோல், இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் ஒப்புதல் அளித்துள்ளார். அதேநேரத்தில், காஸா போர் நிறுத்தம் தொடர்பாக 20 அம்ச அமைதித் திட்ட பரிந்துரைகளுக்கு ஹமாஸ் பதிலளிக்க மூன்று முதல் நான்கு நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். அப்படி பதிலளிக்கவில்லை என்றால் முடிவு மிக மோசமானதாக இருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். மேலும், ”அமைதி ஒப்பந்த முன்மொழிவுகள் குறித்து பேச்சுவார்த்தைக்கு இடமுள்ளதா” என்ற கேள்விக்கு, ”பெரிய அளவில் இடமில்லை” எனவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் காஸா திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அரபு மற்றும் முஸ்லிம் தேசியத் தலைவர்களிடமிருந்து ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், ஹமாஸ் தனது வீரர்களின் உயிருக்கு சர்வதேச உத்தரவாதங்களை நாடுவதாகவும், காஸா மற்றும் மேற்குக் கரை அல்லது உலகளவில் அதன் உறுப்பினர்கள் கொல்லப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இருவரிடமிருந்தும் விரும்புவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஹமாஸ், காஸா, ட்ரம்ப்

காஸா மற்றும் மேற்குக் கரையின் பிராந்திய எல்லைகளில் எந்த மாற்றங்களும் இருக்கக்கூடாது என்றும் அக்குழு வலியுறுத்துகிறது. மேலும் புதிய பாலஸ்தீன அரசின் தலைநகராக கிழக்கு ஜெருசலேமைக் கோரியுள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ஹமாஸ் போராளிக்குழு தனது இராணுவப் பங்கை கைவிட ஒப்புக்கொள்ள இருப்பதாகவும், ஆனால் முன்மொழியப்பட்ட பாலஸ்தீன அரசில், தனது அரசியல் அலுவலகங்களை நிறுவ விரும்புகிறது என்றும், தனது ஆயுதமற்ற போராளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு காஸா மற்றும் லெபனான், எகிப்து, ஜோர்டான், சிரியா, துருக்கி உள்ளிட்ட பிற முஸ்லிம் நாடுகளில் தங்குமிடம் வழங்க வேண்டும் என்றும் அது கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.