நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோஹ்ரான் மம்தானி, ட்ரம்பைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார். இதில் வெற்றிபெற்றதன் மூலம், 34 வயதான அவர், முதல் இஸ்லாமிய மேயர், முதல் ஆசியர், முதல் இந்திய வம்சாவளி மேயர் உள்ளிட்ட பெருமைகளைப் பெற்றுள்ளார். தவிர, மம்தானின் வெற்றி, ஜனநாயகக் கட்சியின் முற்போக்கு அணியின் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. நியூயார்க் மேயர் தேர்தலில் இடதுசாரி கொள்கைகளை கொண்ட மம்தானி வெற்றி பெற்றால், நியூயார்க்கிற்கு அரசு நிதி வழங்காது என அதிபர் ட்ரம்ப் என மிரட்டியிருந்தார். அந்த மிரட்டலே, மம்தானிக்கு வெற்றியைப் பரிசாகத் தந்திருக்கிறது.
இதன்பிறகு வெற்றி உரையாற்றிய மம்தானி, ட்ரம்பைக் கடுமையாக விமர்சித்திருந்தார். அப்போது அவர், “ட்ரம்ப் அவர்களே, எனது வெற்றியுரையை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். உங்களிடம் சொல்வதற்கு சில உள்ளன. ஆகையால், காணொளியின் ஒலியை அதிகரித்துக் கொள்ளுங்கள். ட்ரம்ப்பால் உருவாக்கப்பட்ட நகரமே, அவரை தோற்கடித்தது. இருள் நிறைந்த அரசியலுக்கு மத்தியில், நியூயார்க் ஒளியாக இருக்கும். நியூயார்க்கில், யாரையாவது தொடர்புகொள்ள வேண்டுமானால், நீங்கள் எங்கள் அனைவரையும் கடந்து செல்ல வேண்டும்" எனக் கடுமையாகப் பேசியிருந்தார்.
இந்த நிலையில் ஜோஹ்ரான் மம்தானிக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதுதொடர்பாக அவர், “உங்களுக்குத் தெரியும், நான் நியூயார்க்கை நேசிப்பதால் புதிய மேயர் நன்றாகச் செயல்படுவதைப் பார்க்க விரும்புகிறேன், ஏனென்றால் நான் மிகவும் கோபமாக இருக்கிறேன். நான் நியூயார்க்கை மிகவும் நேசிக்கிறேன். மம்தானி தனது வெற்றி உரையின்போது பேசியது மிகவும் கோபமான பேச்சு என்று நான் நினைக்கிறேன். அதில், நிச்சயமாக என் மீது கோபமாக இருந்தது. அவர், ஒரு மோசமான தொடக்கத்திற்குச் சென்றுவிட்டார்.
அவர், என்னிடம் மிகவும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் அமெரிக்க அரசுடன் அன்பாக நடந்துகொள்ள வேண்டும். மம்தானி ஒத்துழைக்கவில்லை என்றால், அவர் நிறைய இழக்க நேரிடும். நியூயார்க் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே நாங்கள் அவர்களுக்கு உதவுவோம். நியூயார்க்கில் கம்யூனிசத்தில் இருந்து தப்பி ஓடுபவர்களுக்கு விரைவில் புளோரிடா நகரம் அடைக்கலமாக இருக்கும். ஆயிரம் ஆண்டுகளாக, கம்யூனிசம் என்ற கருத்து வேலை செய்யவில்லை. இந்த முறை அது வேலை செய்யுமா என்று நான் சந்தேகிக்கிறேன்” என எச்சரித்துள்ளார்.