ஜெலோன்ஸ்கி, ட்ரம்ப், புதின் எக்ஸ் தளம்
உலகம்

புதினுடன் நெருக்கமா? ஜெலன்ஸ்கியை கடுமையாகச் சாடிய ட்ரம்ப்.. தொடரும் வார்த்தை மோதல்!

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சர்வாதிகாரி என அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் விமர்சித்துள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

Prakash J

உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம் |தொடங்கிய பேச்சுவார்த்தை!

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் டொனால்டு ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியபிறகு, அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாட்டு அதிகாரிகள் இதுதொடர்பாக சவூதி அரேபியாவில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆனால், இந்த ஆலோனைக் கூட்டத்தில் உக்ரைன் சார்பில் எந்த அதிகாரிகளும் கலந்துகொள்ளவில்லை.

புதின், ட்ரம்ப், ஜெலோன்ஸ்கி

இதனிடையே, தங்களுடன் ஆலோசிக்காமல் எடுக்கப்படும் எந்த முடிவையும் ஏற்க முடியாது எனவும், இதுதொடர்பாக ட்ரம்பிடம் பேச இருப்பதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார். பின்னர் அவர், “என்னிடம் பேசுவதற்கு முன்பு ட்ரம்ப் புடினிடம் பேசியது தவறு. ட்ரம்ப் செய்தது பெரிய தவறு. அவர் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ரஷ்யாவிற்கு புதிய பலத்தை கொடுக்கும். சவூதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் பங்கேற்காததால் அதில் எடுக்கப்படும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு பேச்சு வார்த்தையும் நியாயமானதாக இருக்க வேண்டும். உக்ரைனில் போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து உக்ரைன் இல்லாமல் எந்த முடிவும் எடுக்க முடியாது” எனத் தெரிவித்தார். இதற்கிடையே, ‘தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் விளாடிமிர் புடின் தயாராக இருக்கிறார்’ என ரஷ்யா தெரிவித்துள்ளது.

விளாடிமிர் ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சித்த அதிபர் ட்ரம்ப்

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சர்வாதிகாரி என அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் விமர்சித்துள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து ட்ரம்ப், “தேர்தல்கள் இல்லாத ஒரு சர்வாதிகாரிதான் ஜெலன்ஸ்கி. அவர் வேகமாக நகர்ந்துவிடுவது நல்லது. இல்லையெனில் அவருக்கென ஒரு நாடுகூட இருக்கப் போவதில்லை. அவர் தேர்தல்களில் பங்கெடுக்க மறுக்கிறார். உக்ரேனிய கருத்துக்கணிப்புகளில் அவருக்கான ஆதரவுகூட மிகக் குறைவு. ஜெலன்ஸ்கியின் திறமையான ஒரே விஷயம் பைடனை ஒரு பிடில்போல வாசித்திருப்பதுதான். ஜோ பைடன் நிர்வாகம் இன்னும் ஒரு வருடம் ஆட்சியில் இருந்திருந்தால், நீங்கள் மூன்றாம் உலகப் போரில் இருந்திருப்பீர்கள். இப்போது அது நடக்கப் போவதில்லை.

ட்ரம்ப்

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதை, ட்ரம்ப் நிர்வாகம் மட்டுமே செய்ய முடியும் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். இதற்காக, பைடன் அரசு ஒருபோதும் முயற்சிக்கவில்லை. ஐரோப்பாவும் அமைதியைக் கொண்டுவரத் தவறியுள்ளது. அவசியமில்லாத ஒரு போருக்காக, உக்ரைனுக்கு அமெரிக்கா இதுவரை 350 பில்லியன் டாலர்களை செலவழித்துள்ளது. அமெரிக்கா, உக்ரைனுக்கு வழங்கப்பட்ட நிதியைப் பொறுத்தவரை, ஐரோப்பா வழங்கியதைவிட 200 பில்லியன் டாலர்கள் அதிகமாகச் செலவிட்டுள்ளது” என சரமாரியாக விமர்சித்துள்ளார்.

ட்ரம்பின் விமர்சத்திற்கு ஜெலன்ஸ்கி பதிலடி

முன்னதாக, இந்தப் போரை உக்ரைன் நடத்தியிருக்கக் கூடாது எனவும், அந்நாடு நேட்டோவில் இணைய வாய்ப்பில்லை எனவும் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட பகுதிகள் உக்ரைனுக்கு திரும்ப வழங்கப்படாது எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு ஜெலென்ஸ்கி, “இந்த புள்ளிவிவரங்கள் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் விவாதிக்கப்படுகின்றன என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. ட்ரம்ப், இந்த தவறான தகவல் உலகத்தில் வாழ்கிறார். புதினை தனிமையில் இருந்து விடுவிக்க உதவுகிறார். இது உக்ரைனுக்கு சாதகமானதல்ல” எனப் பதிவிட்டுள்ளார்.

ஜெலோன்ஸ்கி, ட்ரம்ப், புதின்

டிசம்பர் 2024 நிலவரப்படி, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு சுமார் 138 பில்லியன் டாலர் அனுப்பியுள்ளது. அதேநேரத்தில், அமெரிக்கா சுமார் 120 பில்லியன் டாலரை அனுப்பியதாக கீல் இன்ஸ்டிடியூட் ஃபார் தி வேர்ல்ட் எகானமி தெரிவித்துள்ளது.

டொனால்டு ட்ரம்ப் மற்றும் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோர் இடையே ஏற்பட்டிருக்கும் வார்த்தைப் போர் தற்போது தீவிரமடைந்துள்ளது.