உலகம்

குர்துப் படையினருக்கு கூடுதல் ஆயுதங்கள்: அமெரிக்கா அறிவிப்பு

webteam

சிரியாவில் உள்ள குர்துப் படையினருக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அனுமதி வழங்கியுள்ளார்.

சிரியாவில் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகளை எதிர்த்துச் சண்டையிட்டு வரும் குர்துப் படையினருக்கு கூடுதலாக ஆயுதங்களை வழங்க உள்ளதாக பென்டகன் கூறியுள்ளது. தற்போது ஐ.எஸ் பிடியில் இருக்கும் ரக்காவிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் சிரியா குர்துப் படை முகாமிட்டுள்ளது. தக்பா நகரின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டு வர ஐ.எஸ் பயங்கரவாதிகளோடு சண்டையிட்டு வருகிறது.

இந்நிலையில் ஆயுதங்கள் வழங்க உள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்கா, அவை எப்போது வழங்கப்படும் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை, அதே நேரத்தில் குர்துப் படைகளுக்கு ஆயுதம் வழங்குவது குறித்து துருக்கி கவலை கொள்ளத் தேவையில்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

இது தொடர்பாக துருக்கி பாதுகாப்பு அமைச்சருடன் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் தொலைபேசி வாயிலாகப் பேச்சு நடத்தியதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது. துருக்கியையும் அதன் மக்களையும் காப்பதிலும் அமெரிக்கா உறுதியாக உள்ளதாக பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.