donald trump, putin x page
உலகம்

டாலருக்கு எதிராய் ட்ரம்ப் எச்சரிக்கை.. பிரிக்ஸ் நாடுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

“உலகளாவிய வர்த்தகத்தில் வலிமையான அமெரிக்க டாலருக்குப் பதிலாக புதிய நாணயத்தை நிறுவினால், 100% வரி விதிக்கப்படும்” என அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்டு ட்ரம்ப், பிரிக்ஸ் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Prakash J

உலகம் முழுதும் டாலரைப் பயன்படுத்தியே வர்த்தகம்!

ஒரு நாட்டின் வளர்ச்சி, அதன் உற்பத்தியையும் வர்த்தகத்தையும் நம்பியே இருக்கிறது. குறிப்பாக, ஒரு நாட்டின் கரன்சி மூலம் வர்த்தகம் செய்யப்படுவதால், அந்த நாட்டுக்குத்தான் மதிப்பு அதிகம். காரணம், அக்கரன்சியானது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுவதால் அதன் மதிப்பு தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும். தவிர, இது அதிகளவில் புழக்கத்தில் இருப்பதுடன், பயன்படுத்துவதும் எளிதாகிறது. இதில், உலகளவில் பல்வேறு நாடுகளுக்கு இடையே செய்யப்படும் வர்த்தகம், அமெரிக்காவின் டாலரை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டு வருகிறது. அதாவது, உலகில் பெரும்பான்மையான பொருள் வாங்குவதற்கும், விற்பதற்கும் அமெரிக்க டாலர் மதிப்பிலேயே விலை நிர்ணயிக்கப்பட்டு, டாலரை பயன்படுத்தியே வர்த்தகம் நடைபெறுகிறது. குறிப்பாக, கச்சா எண்ணெய், தங்கம் உள்ளிட்டவற்றை வாங்கவும் விற்கவும் டாலர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்க டாலர்

25 ஆண்டுகளாகக் குறைந்துவரும் டாலரின் ஆதிக்கம்!

மேலும், சில நாடுகள் தங்கள் நாட்டின் கரன்சியாக அமெரிக்காவின் டாலரைக் கொண்டிருப்பதுடன், இன்னும் சில நாடுகள் தங்கள் நாட்டு நாணயத்துடன் அமெரிக்க டாலரை ஒப்பிடவும் செய்கின்றன. அதனாலேயே, உலகின் 60% நிதி கையிருப்புகள் அமெரிக்க டாலர்களில் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்காவின் டாலர் முதன்மை கரன்சியாக மாறியதால், மற்ற நாடுகளும் அதை நம்பி இருக்க வேண்டிய சூழல் ஆரம்பித்தது.

அதுமுதல் உலக வர்த்தகத்தில் அமெரிக்காவின் டாலர் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. ப்ரூக்கிங்ஸ் என்ற திங்க் டேங் என்ற நிறுவனம், உலகளவில் நடக்கும் அனைத்து கடன் பரிவர்த்தனைகளில் 64% டாலர்களில் இருப்பதாகவும், உலக நாணய கையிருப்பில் 59% டாலராக இருப்பதாகவும் தெரிவிக்கிறது. அதேநேரத்தில், கடந்த 25 ஆண்டுகளில் டாலரின் ஆதிக்கம் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. உலகளாவிய கையிருப்பாக அமெரிக்க டாலரின் பங்கு 12% குறைந்துள்ளதாகவும், இதன் பங்கு, 2000ஆம் ஆண்டில் 71% ஆக இருந்தது எனவும், இது 2024 இல் 59% ஆக குறையும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

டாலரைப் புறக்கணிக்கக் காரணம் என்ன?

இந்த நிலையில், சில நாடுகள் டாலரைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் நாட்டு நாணய மதிப்பில் வர்த்தகம் செய்ய முடிவெடுத்துள்ளன. நிதி நெருக்கடி, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் அமெரிக்காவின் டாலர் மதிப்பு கணிக்க முடியாத அளவுக்கு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. அதிலும் கொரோனா தொற்றுப் பரவலுக்குப் பின் டாலரில் ஏற்படும் மாற்றம், பொருளாதார உறுதியற்ற தன்மையை உருவாக்கி இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

இதைத் தவிர்க்கும் பொருட்டே, டாலர் பயன்பாட்டைக் குறைக்கும் நடவடிக்கையில் குறிப்பிட்ட சில நாடுகள் களம் இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. பயன்பாட்டை குறைப்பதன் மூலம், டாலர் மதிப்பைக் குறைக்க முடியுமென அந்த நாடுகள் கூறுகின்றன. இதற்காக, அமெரிக்க டாலரை நம்பியிருக்கும் நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றன. இதில், இந்தியாவும் இணைந்திருப்பதுதான் வியப்புக்குரிய விஷயம்.

உலக நாடுகள் மத்தியில், டாலருக்கு என மவுசு குறையாமல் இருப்பது ஒருபுறமிருக்க, மறுபுறம் இது பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. உதாரணமாக இந்தியாவை எடுத்துக்கொண்டால், இந்திய ரூபாய்க்கு எதிராக டாலரின் வளர்ச்சி, நமது ரூபாயை மதிப்பற்றதாக மாற்றிவிடுகிறது. இதே பிரச்னை சீனா, ரஷ்யா உள்ளிட்ட பெரிய நாடுகளுக்கும் இருக்கிறது. எனவே, இதனை சரிசெய்ய, டாலருக்கு எதிராக புதிய ரூபாய் நோட்டுகளை உருவாக்க பிரிக்ஸ் நாடுகள் முயன்றுள்ளன. குறிப்பாக ரஷ்யா, இதற்காக தீவிரமாக முயன்றுவருகிறது.

புதின்

பிரிக்ஸ் மாநாட்டில் பேசப்பட்ட டாலருக்கு மாற்றான நாணயம்

ரஷ்யாவின் கசான் நகரில், கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், டாலர் அல்லாத பரிவர்த்தனைகளை அதிகரிப்பது குறித்து இந்தக் கூட்டமைப்பு விவாதித்தது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் ரஷ்யா வர்த்தம் மேற்கொள்ளும்போது, அந்தந்த நாட்டின் பணமாகக் கொடுத்தால் போதுமானது என்று கூறியிருக்கிறது. எனவே, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்க் கொள்முதலை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. இந்த வர்த்தக பரிமாற்றத்தை மேலும் அடுத்தகட்டத்திற்குக் கொண்டுசெல்ல, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் கூட்டணிக்கு என பொதுவான நாணய மதிப்பை உருவாக்க ரஷ்யா, கடந்த 2022 முதல் யோசித்து வருகிறது. இது டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்கும் என்றும் ரஷ்யா நம்பிக்கை தெரிவித்திருந்தது.

பிரிக்ஸ் நாணயத்தை அறிமுகப்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில், எந்த முடிவும் எடுக்கப்படாதபோதும், இந்த நாடுகளுக்கு இடையே எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனை செய்வதற்கான புதிய வழிமுறையை உருவாக்குவது குறித்து பேசப்பட்டுள்ளது என்பது மறுப்பதற்கில்லை.

இந்த மாநாட்டில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், இதற்கான நேரம் இன்னும் வரவில்லை. இதில், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த அவசரமும் இல்லாமல் படிப்படியாகச் செயல்பட வேண்டும். தேசிய நாணயங்களைப் பரவலாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் குழு ஆய்வு செய்து வருகிறது எனத் தெரிவித்தார். எனினும், டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தைக் கண்டுபிடிக்க சவூதி அரேபியாவுடன் சீனாவும், ரஷ்யாவுடன் இந்தியாவும் அதேபோன்று ஒப்பந்தம் செய்துள்ளன. அதேநேரத்தில், டாலருக்கு மாற்றாக வேறு ஒரு நாணயத்தைப் பெறுவதற்கு வெகு காலமாகலாம் எனவும் கூறப்படுகிறது.

பிரிக்ஸ் நாடுகளுக்கு டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை!

இந்த நிலையில்தான், அமெரிக்காவில் 47வது அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப், டாலர் விஷயத்தில் அதிரடி காட்டியுள்ளார். பிரிக்ஸ் நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதில், “புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கவோ அல்லது சக்திவாய்ந்த அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறொரு நாணயத்தை முன்னிறுத்துவதையோ ஆதரிக்க மாட்டோம். அப்படி நடந்தால், 100 சதவிகித வரியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை முன்னிறுத்த முயற்சிக்க மாட்டோம் என்ற உறுதிமொழி எங்களுக்குத் தேவை.

பிரிக்ஸ் நாடுகள் வேறு நாணயத்தை முன்னிறுத்தினால், அற்புதமான அமெரிக்கப் பொருளாதாரத்தில் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வதில் இருந்து விடைபெற வேண்டும். அவர்கள் வேறு நாட்டில் விற்பனை செய்துகொள்ளலாம். சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை மாற்றுவது பிரிக்ஸ் கூட்டமைப்பால் முடியாது. அவ்வாறு செய்யும் எந்த நாடும் அமெரிக்காவிடம் இருந்தும், அனைத்து வர்த்தகத்தில் இருந்தும் விடைபெற வேண்டும்” என அவர் எச்சரித்துள்ளார்.

டொனால்டு ட்ரம்ப்

இதை, “உலகம் முழுவதும் டாலரின் ஆதிக்கம் தொடர வேண்டும் என்பதும், உலகப் பொருளாதாரத்தில் பிரிக்ஸ் நாடுகள் தற்போது உயர்ந்து வருவதைக் கண்டுமே ட்ரம்ப், இத்தகைய எச்சரிக்கையை விடுத்திருக்கலாம்” என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில், “ட்ரம்பின் இந்த எச்சரிக்கையை பிரிக்ஸ் நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுத்தால், ரஷ்யாவைப்போலவே பிற நாடுகளுக்கும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம், இதிலிருந்து அவைகள் தப்பிக்க முடிவு செய்யும்பட்சத்தில், சொந்த நிதி வலையமைப்பை உருவாக்கும்” எனவும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பிரிக்ஸ் (BRICS) என்பது என்ன? அதன் உறுப்பு நாடுகள் எத்தனை?

வளர்ச்சிப் பாதையில் இருக்கும் பொருளாதாரங்களின் ஒரு கூட்டமைப்பே, பிரிக்ஸ் (BRICS) எனப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பில் தொடக்கம் முதல் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா (2010) ஆகிய நாடுகள் உள்ளன. ஆனால், சமீபகாலமாக இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடப்பாண்டு தொடக்கத்தில் எகிப்து, ஈரான், எத்தியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன. இந்தக் கூட்டமைப்பில் இணைய அஜர்பைஜான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் விண்ணப்பித்துள்ள நிலையில், சவூதி அரேபியாவும் இணைய ஆர்வம் காட்டியுள்ளது.

தற்போது வரை, சுமார் 30 நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் சேர விருப்பம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் உறுப்பு நாடுகளின் மொத்தப் பொருளாதாரம் 25.5 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது. இது உலகப் பொருளாதாரத்தில் 28% ஆகும். இதனால்கூட, ட்ரம்ப் அந்த எச்சரிக்கையை விடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முன்னதாக, சில நாடுகள் டாலரைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் நாட்டு நாணய மதிப்பில் வர்த்தகம் செய்ய முடிவெடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் பல நாடுகள் தற்போது இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ளலாம் என முடிவெடுத்திருந்தன. அதன்படி, இதுவரை இந்தியாவுடன் அமெரிக்க டாலரில் வர்த்தகம் செய்துவந்த வங்கதேசம், இனி இந்திய ரூபாயிலேயே வர்த்தகத்தை மேற்கொள்ள முடிவு செய்திருந்தது. அதுபோல், சீனாவும் பிரேசிலும் தங்களுடைய கரன்சிகளில் வர்த்தகம் செய்ய முடிவெடுத்துள்ளன. தொடர்ந்து அர்ஜென்டினாவும் யுவான் மூலம் வர்த்தகம் செய்ய இருப்பதாக சீனாவிடம் தெரிவித்துள்ளது.